மேற்குவங்க மாநிலம் பூர்வா மெடினிபூர் ரயில் நிலையத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் காவலர் கே.சுமதி, பூர்வா மெடினிபூர் ரயில் நிலையத்தின் நடைமேடையொன்றில் பாதுகாப்பு பணியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர் நடைமேடையில் இருந்த நபர் ஒருவர் அங்குமிங்குமாக பார்த்த வண்ணம் இருந்தார். சில நிமிடங்களில் தனது இடதுபுறத்தில் இருந்து அதிவேகத்தில் ரயில் வருவதைப் பார்த்த அந்த நபர், நடைமேடையில் இருந்து கீழே குதித்து, ரயில் வந்துக்கொண்டிருந்த இரண்டாவது தண்டவாளத்திற்கு சென்று தனது தலையை, அதில் வைத்துக்கொண்டு படுத்துவிட்டார்.
இதனை தூரத்தில் இருந்து பார்த்த பெண் காவலர் சுமதி, சிறிதும் தாமதிக்காமல், அவரும் எதிர் நடைமேடையில் இருந்து குதித்துச் சென்று அந்த நபரை தண்டவாளத்தில் இருந்து இழுத்து வெளிக்கொண்டு வந்தார். பின்னர், அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்ததும் ஒருசிலர் ஓடிவந்து அனைவரும் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற நபரை காப்பாற்றினர். பெண் காவலர் காப்பாற்றிய சில நொடிகளில், ரயில் அதிவேகத்தில் கடந்துச்சென்றனர். பெண் காவலர் சுமதியின் இந்த துரிதமான மற்றும் துணிவுக்கரமான செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.