மும்பையில் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் பாபா சித்திக்கின் படுகொலைக்கு, சிறையில் இருக்கும் பிரபல 'கேங்ஸ்டார்' லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக் கொண்டது. இதே கும்பல், பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தற்போது பாபா சித்திக்கின் படுகொலையைத் தொடர்ந்து, சல்மான் கான் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிஷ்னோய் சமூகத்தினரின் புனித விலங்கான மான்களை, சல்மான் கான் வேட்டையாடினார் என்பதற்காகவே அவர் லாரன்ஸ் பிஷ்னோயால் குறிவைக்கப்பட்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம்கூட சல்மான் கான் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சல்மான் கான் பிஷ்னோய் சமூகத்தினரின் புனித விலங்கை சுட்டதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை எம்.பி ஹர்நாத் சிங் யாதவ் வலியுறுத்தி இருந்தார். அதேநேரத்தில் சல்மான் கானின் தந்தை சலீம் கான், “இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லாத சல்மான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? இந்த மிரட்டல்கள் என்பது தொடர்ந்து மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்” என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் லாரன்ஸ் பிஷ்னோயின் உறவினரான ரமேஷ் பிஷ்னோய் இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “எங்கள் சமூகம் வனவிலங்குகள் மற்றும் மரங்களை நேசிக்கிறது. எங்களுடைய 363 முன்னோர்கள் மரங்களை காப்பாற்ற தங்கள் உயிரைக் கொடுத்துள்ளனர். சல்மான் கான் மான்களைக் கொன்றபோது, ஒவ்வொரு பிஷ்னோய் மக்களின் இரத்தமும் கொதித்தது. அதை நீதிமன்றத்திற்கு விட்டுவிட்டோம்.
ஆனால் சமூகத்தைக் கேலி செய்தால், அப்போது சமூகம் கோபப்படுவது இயற்கையானது. இன்று ஒட்டுமொத்த பிஷ்னோய் சமூகமும் இந்த விஷயத்தில் லாரன்ஸுடன் நிற்கிறது. ’பணத்துக்காக லாரன்ஸ் கும்பல் இப்படிச் செய்கிறது’ என்று அவரது தந்தை சலீம் கான் தெரிவித்துள்ளார். அவரது மகன் எங்கள் சமூகத்தின்முன் ஒரு காசோலைப் புத்தகத்தைக் கொண்டுவந்ததை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். பணத்திற்குப் பசித்திருந்தால், அந்த நேரத்தில் நாங்கள் எடுத்திருப்போம்.
மான்களை வேட்டையாடிய வழக்கில், சல்மான் கான் குற்றவாளி. 5 ஆண்டுகள் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார். லாரன்ஸ் மீதான குற்றம் ஏதேனும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதா? நீதிமன்றம் குற்றவாளி என நிரூபிக்கும் போதுதான் அவர் குற்றவாளியாகக் கருதப்படுவார். ஆகையால், சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரது குடும்பத்தினர் எங்கள் மத உணர்வுகளுடன் விளையாடுகிறார்கள். சல்மான் கான் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், சட்டம் தனது வேலையைச் செய்யும்.
அதுபோல், மிரட்டி பணம் பறித்தல் வழக்குகளில் லாரன்ஸ் பிஷ்னோய் ஈடுபடுபவர் அல்ல. அவர் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இதுவரை அதுபோல் மிரட்டி பணம் பறித்ததாக எந்த வழக்குகளும் நிரூபிக்கப்படவில்லை, லாரன்ஸுக்கு 110 ஏக்கர் நிலம் உள்ளது. அவருடைய இரண்டு சகோதரர்கள் அதன் நில உரிமையாளர்களாக உள்ளனர். 110 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர் பணத்திற்காக இதுபோன்ற செயலைச் செய்வாரா? மற்றவர்கள்தான் அவரிடம் வரி கேட்கிறார்கள். பாபா சித்திக் கொலை வழக்கில் லாரன்ஸுக்கு தொடர்புள்ளதா என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும்” எனத் தெரிவித்துள்ளார்.