இந்தியா

பீகார் சட்டப்பேரவையில் முதலமைச்சர், சபாநாயகர் காரசார விவாதம்

பீகார் சட்டப்பேரவையில் முதலமைச்சர், சபாநாயகர் காரசார விவாதம்

Sinekadhara

பீகார் சட்டப்பேரவையில், விவாதத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கும் சபாநாயகர் விஜய் குமார் சின்காவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

சபாநாயகர் விஜய் குமார் சின்காவின் சொந்தத் தொகுதியான லக்கிசராயில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சபையில் விளக்கமளிக்கும்படி அவர், அமைச்சர் பிஜேந்திர யாதவிடம் கேட்டார். அப்போது, எழுந்து பேசிய நிதிஷ் குமார், அரசின் சார்பில் பதிலளிக்க அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது, விசாரணை நடந்து வருவதாக அமைச்சர் கூறும்போது, நாளை மறுதினம் புதிய பதிலுடன் வருமாறு அவருக்கு அறிவுறுத்தலாமா? என்று வினவினார்.

இது பேரவை விதிகளுக்கு புறம்பானது, தயவு செய்து அரசியலமைப்புச் சட்டத்தை பாருங்கள் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். அரசால் விசாரணை நடத்தப்பட்டு, உரிமைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட ஒரு விசயத்தை சபையில் மீண்டும் மீண்டும் எழுப்பலாமா? எனவும் முதலமைச்சர் நிதிஷ் குமார் கேள்வி எழுப்பினார். சபாநாயகர் சுட்டிக்காட்டுவது போன்ற விசயங்களில் அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுத்து, விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

அனுபவமிக்க அரசியல்வாதியான முதல்வரை பெரிதும் மதிப்பதாகவும், அதேநேரம் எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலால் அமைச்சர் விளக்கமளிக்க கேட்டுக் கொண்டதாகவும் சபாநாயகர் பதிலளித்தார். முதல்வர் - சபாநாயகர் காரசார விவாதத்தை பீகார் சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் கூர்ந்து கவனித்தனர்.