மத்திய அரசு ஆகஸ்ட் 8 அன்று வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவிற்கு INDIA கூட்டணிக் கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனையடுத்து அந்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக, 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், மக்களவையில் இருந்து 21 பேர், மாநிலங்களவையில் இருந்து 10 பேர் என பாஜக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
குறிப்பாக, மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 12 எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 8 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சியில் இருந்து 9 பேர் இடம்பெற்றுள்ளனர். மாநிலங்களவையில் பாஜகவில் இருந்து 4 பேரும், எதிர்க்கட்சிகளில் இருந்து 4 பேரும் இடம்பெற்றுள்ளனர். மேலும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவரும், நியமன உறுப்பினராக இடம்பெற்றுள்ளார்.
இந்தநிலையில், இந்த கூட்டுக்குழுவின் தலைவராக பாஜகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஜகதாம்பிகா பாலை, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நியமித்துள்ளார். ஜகதாம்பிகா இதற்கு முன் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் செயல்பட்டவர். 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில், அதன்பின்னர் பாஜகவில் இணைந்தார்.
சபாநாயகர் இல்லாத நேரத்தில் சபை நடவடிக்கைகளை பார்வையிடும் மக்களவையின் தலைவர்கள் குழுவிலும் ஜகதாம்பிகா பால் இருக்கிறார்.