ஹிஜாப் அணிந்த பெண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக வருவார் என, ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ய அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி சென்றுள்ளார். கர்நாடக மாநிலம் பீஜாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றப் பின் செய்தியாளர்களிடம் சந்திப்பில் பேசியவர், ‘’அனைவருக்கும் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி மற்றும் அனைவரது நம்பிக்கை' என பிரதமர் கூறுவது எல்லாம் வெற்றுப் பேச்சுகள் தான். பாஜக முஸ்லிம்களுக்கு எதிரானது.
ஹலால் இறைச்சியால் ஆபத்து, முஸ்லீம்களின் தாடியால் ஆபத்து, தொப்பியால் ஆபத்து, முஸ்லீம்களின் உணவு பழக்கவழக்கங்களால் ஆபத்து என பாஜக கருதுகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் முஸ்லீம் அடையாளத்தை ஒழிப்பதே அவர்களின் உண்மையான செயல் திட்டம். நான் உயிருடன் இருக்கும் போதோ அல்லது எனது மறைவிற்கு பிறகோ, ஹிஜாப் அணிந்த பெண்மணி ஒருவர் இந்திய பிரதமராவார்” ஒவைசி கூறினார்.
ஹிஜாப் அணிந்த பெண்மணி ஒருவர் இந்திய பிரதமராவார் என்று ஓவைசி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் ஓவைசி இவ்வாறு கூறுவது இதுமுதல் முறை அல்ல.
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் கல்லூரிகளுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையான சமயத்தில், ‘ஹிஜாப் அணிவது தொடர்பாக விருப்பத்தை பெற்றோரிடம் பெண்கள் தெரிவிக்க வேண்டும். பெற்றோரும் அதனை ஆதரிக்க வேண்டும். இந்தியாவில் ஹிஜாப் அணிந்து கொண்டு பெண்கள் கல்லூரிக்கு போவார்கள், நீதிபதிகள் , ஆட்சியர்களாவார்கள். அடுத்த 20 ஆண்டுகளில் இஸ்லாமியர் பெண் ஒருவரே பிரதமராவார். அப்படி ஒரு நிலைமை உருவாகிவிடக் கூடாது என்பது இந்துத்துவவாதிகளின் எண்ணம்’’ என கூறியிருந்தார்.
இதற்கு அப்போது பதிலளித்த பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, ‘’ "ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக வருவார் என்று ஒவைசி நம்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் யாரையும் தடுக்கவில்லை, ஆனால் ஹிஜாப் அணிந்த பெண் எப்போது மஜ்லிஸ் கட்சியின் தலைவராவார் என்று சொல்லுங்கள். அதிலிருந்து தொடங்குவோமா? என்றிருந்தார்.