நிர்பயா வழக்கு குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகியோரை வரும் நாளை மறுநாள் காலை 5.30 மணிக்கு தூக்கிலிடுமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அவர்கள் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்ததால், தூக்கில் போடுவது 3 முறை தள்ளிப்போனது. ஆனால் அனைத்து மனுக்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில் தூக்கிலிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார் சிங்கின் மனைவி தனக்கு விவாகரத்து வேண்டுமென நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவரது மனுவில் ''மார்ச் 20ம் தேதி எனது கணவர் தூக்கிலிடப்பட்டால் நான் விதவை ஆகிவிடுவேன். அதனால் கணவரை தூக்கிலிடுவதற்கு முன்பாக எனக்கு விவாகரத்து வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள அக்ஷய் குமார் சிங்கின் மனைவி ''என் கணவர் நிரபராதி. தூக்கிலிடுவதற்கு முன்பாக எனக்கு விவாகரத்து வேண்டும்'' என தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அக்ஷய் குமார் சிங் மனைவி தரப்பு வழக்கறிஞர், ''எனது கட்சிக்காரர் அவரது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார்.அதனால் தான் நாங்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளோம்'' என தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் தூக்கு என அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கு மேல் தூக்குத்தண்டனை தள்ளிப்போக வாய்ப்பில்லை என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.