இந்தியா

தொடங்கியது தபால் வாக்குப்பதிவு - முதல் வாக்கை பதிவு செய்தவர் யார்?

rajakannan

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்‌தலில் முதல் வாக்கை பதிவு செய்த நபர் என்ற பெருமையை காவல் அதிகாரி சுதாகர் நடராஜன் பெற்றுள்ளார்.

நாடு முழுவதும் மக்‌களவைத் தேர்தல் வரும் 11ம் தேதி தொடங்கும் நிலையில் அதற்கு முன்னதாக தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் முதலாவதாக அருணாச்சல பிரதேசத்தில் பணியில் உள்ள இந்தோ திபெத் எல்லைக்காவல் படை வீரர்கள் தங்கள் தபால் வாக்கை நேற்று பதிவு செய்தனர். 

லோஹித்பூர் என்ற இடத்தில் நடந்த வாக்குப்பதிவில் இந்தோ திபெத் காவல் படை உயரதிகாரி சுதாகர் நடராஜன் முதல் வாக்கை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து மற்ற காவல் துறையினரும் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். இந்த வாக்குகள் தபால் மூலம் சம்மந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பப்படும். 

தங்‌கள் சொந்த ஊரை விட்டு அரசுப் பணி நிமித்தம் வெளியூர்களில் பணிபுரியும் ராணுவ வீரர்கள்,துணை ராணுவ வீரர்கள், மத்திய அரசு அதிகாரிகள் ஆகியோர் தபால் மூலம் வாக்களிக்கும் வசதி தரப்படுகிறது. இவர்கள் சர்வீஸ் வாக்காளர்கள் என அழைக்கப்படுகின‌றனர்.