இந்தியா

வாக்குச்சாவடி பற்றிய விவரங்களை அறிய எஸ்.எம்.எஸ் வசதி

வாக்குச்சாவடி பற்றிய விவரங்களை அறிய எஸ்.எம்.எஸ் வசதி

webteam

வாக்காளர்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் தேர்தல் ஆணையத்தின் உதவி எண்ணான 1950 புதுப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் முனைப்புடன் செய்துவருகிறது. தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுடன் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை நடத்திவருகிறது. அத்துடன் வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்களையும் நடத்திவருகிறது.

அந்தவகையில் தற்போது வாக்காளர்களுக்கு உதவிமைய எண்ணை புதுப்பித்துள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி தற்போது வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் பட்டியலிலுள்ள தங்களின் விவரங்கள், வாக்குச்சாவடி மையம் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பற்றிய விவரங்களை தெரிந்துக் கொள்ளமுடியும். இவை அனைத்தும் வாக்காளர் உதவி எண்ணான 1950ன் மூலம் கிடைக்கும்.

மேலும் வாக்காளர்கள் 1950 என்ற எண்ணிற்கு கட்டணமின்றி எஸ்.எம்.எஸ் அனுப்பி இந்தத் தகவலை பெறலாம். அதாவது 1950 என்ற எண்ணிற்கு 'ECI' என டைப் செய்து ‘EPIC NUMBER’எனப்படும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை கொடுக்கவேண்டும். அத்துடன் தகவலை ஆங்கிலத்தில் பெறவேண்டும் என்றால் ‘0’ ( ஜீரோ ) சேர்த்து அனுப்பவேண்டும். மேலும் தகவலை தங்களின் மொழியில் பெறவேண்டும் என்றால் ‘1’ ஐ சேர்த்து அனுப்பவேண்டும். 

அதாவது ECI <EPIC Number>  <0 (for reply in English) or <1 (for reply in the regional language)என அனுப்ப வேண்டும். 

அதன்பின்னர் 'ECIPS' என்று டைப் செய்து அத்துடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைத்து எஸ்.எம்.எஸ் அனுப்பவேண்டும். அவ்வாறு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் வாக்காளரின் வாக்குச்சாவடி மையத்தின் விவரம் தெரியவரும்.
                                   
அதாவது,  ECIPS <EPIC Number> என்ற முறைப்படி அனுப்ப வேண்டும்.  

வாக்காளர்கள் தங்களின் வாக்குச்சாவடியின் தேர்தல் அதிகாரிகள் பற்றி தகவல் தெரியவேண்டும் என்றால் அவர்கள் ‘ECICONTACT ’என்று டைப் செய்து அத்துடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை சேர்த்து 1950 எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவேண்டும்.
  
அதாவது ECICONTACT <EPIC Number> என்ற முறைப்படி அனுப்ப வேண்டும். 

இவ்வாறு வாக்காளர்கள் தங்களுக்கு தேவையான தகவலைகள் கட்டணமின்றி எளிதில் பெறும் வசதியை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.