வோடோஃபோன் நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை நிறுத்தப் போவதாக தகவல் ஒன்று சமீபத்தில் பரவி வருகிறது.
இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று வோடோஃபோன். இந்த நிறுவனம் சமீபத்தில் பெரிய அளவில் வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. அத்துடன் இந்த நிறுவனம் ஐடியா நிறுவனத்துடன் இணைந்ததில் ஒரு பெரிய நஷ்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. மேலும் தற்போது வோடோஃபோன் நிறுவனத்தின் பங்குகளின் விலையும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
இந்தச் சூழலில் வோடோஃபோன் நிறுவனம் இந்தியாவிலிருந்து தனது சேவையை நிறுத்தப் போவதாக ஒரு தகவல் பரவிவருகிறது. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இவை ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் உச்சநீதிமன்றம் அளித்த திருத்தப்பட்ட வருவாய் (Adjusted Gross Revenue) வழக்கின் தீர்ப்பின்படி வோடோஃபோன் நிறுவனம் 28,309 கோடி ரூபாய் தொகையை மூன்று மாதங்களுக்குள் அளிக்கவேண்டும். இந்தத் தீர்ப்பு வோடோஃபோன் நிறுவனத்தை மிகுந்த நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.
ஏனென்றால் ஏற்கெனவே பங்குச் சந்தைகளில் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் வோடோஃபோன் நிறுவனத்திற்கு இந்தத் தொகையை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் வோடோஃபோன் நிறுவனம் தனது இந்திய சேவையை தொடர்வதில் சிக்கல் இருப்பதாகவும் மற்றொரு செய்தி பரவி வருகிறது. எனவே இந்த விவகாரம் குறித்து விரைவில் வோடோஃபோன் நிறுவனம் தகுந்த விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.