இந்தியாவில் விஎல்சி மீடியா பிளேயர், அதன் இணையதளம் மற்றும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் இணைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரீஸை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் வீடியோலேன் (VideoLAN) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மிகவும் பிரபலமான மீடியா பிளேயர் மென்பொருளான விஎல்சி (VLC) மீடியா பிளேயர் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு முன்பே விஎல்சி மீடியா பிளேயர் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தடை தொடர்பான விவரங்களை வீடியோலேன் நிறுவனமோ அல்லது இந்திய அரசாங்கமோ வெளியிடவில்லை. புதிதாக விஎல்சி மீடியா பிளேயரை இணையத்தில் பதிவிறக்குவது மட்டுமே தடை செய்யப்பட்டு இருப்பதால், ஏற்கனவே நிறுவப்பட்ட விஎல்சி பிளேயர்கள் வழக்கம்போல இயங்கி வந்துள்ளன.
வீடியோலேன் நிறுவனமானது சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ள சைகாடா (Cicada) எனும் சீன ஆதரவு ஹேக்கிங் தொழில்நுட்பத்தை கையாள்வதால் இந்த தடை விதிக்கப்பட்டிருக்கக்கூடும் என தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சைபர் தடுப்பு தொழில்நுட்பம் தொடர்பான விவகாரம் என்பதால் விதிக்கப்பட்ட தடை என்பதால் அந்நிறுவனமோ அல்லது இந்திய அரசாங்கமோ விஎல்சி மீடியா பிளேயர் ஊடக தளத்தை தடை செய்வதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ககன்தீப் சப்ரா என்ற ட்விட்டர் பயனர் VLC இணையதளத்தின் ஸ்கிரீன் ஷாட்டை ட்வீட் செய்துள்ளார், அதில் “ஐடி சட்டம், 2000ன் கீழ் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவின்படி இணையதளம் தடை செய்யப்பட்டுள்ளது” என்று தகவல் இடம்பெற்றுள்ளது. சைபர் தொழில்நுட்ப புகார் சரிசெய்யப்பட்டால் மீண்டும் விஎல்சி இணையதளம் மற்றும் பதிவிறக்க லிங்க் தடையில் இருந்து விலக்கு பெற்றுவிடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில், இந்திய அரசாங்கம் PUBG மொபைல், டிக்டோக், கேம்ஸ்கேனர் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய நூற்றுக்கணக்கான சீன செயலிகளை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செயலிகளைத் தடை செய்வதற்கு காரணம், இந்த தளங்கள் பயனர் தரவை சீனாவுக்கு அனுப்புவதாக அரசாங்கம் கருதுகிறது.