விகே பாண்டியன் pt web
இந்தியா

”தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்” - விகே பாண்டியன் அறிவிப்பு; வீடியோவில் உருக்கமான பேச்சு

தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வி கே பாண்டியன் அறிவித்துள்ளார். ’நவீன் பட்நாயக்கிற்கு உதவவே நான் அரசியலுக்கு வந்தேன்; பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை’ என்று வி கே பாண்டியன் விளக்கமளித்துள்ளார்

PT WEB

தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வி கே பாண்டியன் அறிவித்துள்ளார். நவீன் பட்நாயக்கிற்கு உதவவே தான் அரசியலுக்கு வந்ததாகவும், பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை என்றும் வி கே பாண்டியன் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த 2 நிமிடம் 20 நொடிகள் கொண்ட வீடியோவில், வி கே பாண்டியன் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். அதில், பல முக்கியமான விஷயங்களை தெரிவித்துள்ளார். அதில், அரசியலில் தன் மீதான குற்றச்சாட்டுகளை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக குறிப்பிட்டு, அதையும் ஓய்வுக்கான காரணமாக ஒன்றாக தெரிவித்துள்ளார். நடந்துமுடிந்த தேர்தலில் கூட, அவர் தமிழர் என்பதாலேயே ஒடிசா அரசியலில் கடுமையான பேசு பொருளாக மாறி இருந்தார். இந்த விவகாரங்கள் தமிழ்நாடு வரையும் எதிரொலித்திருந்தது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “மக்களுக்கு சேவையாற்றவே ஐஏஎஸ் பணிக்கு வந்தேன். ஒடிசாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு உதவி புரியவே அரசியலுக்கு வந்தேன். பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை. மூதாதையர்களின் சொத்துகளே என்வசம் உள்ளன. நாப் ஐஏஎஸ் சேரும்போது இருந்த சொத்துக்களே, இப்போதும் என்னிடம் உள்ளன” என தெரிவித்துள்ளார். எனது அரசியல் வாரிசு வி.கே. பாண்டியன் இல்லை என நவீன் பட்நாயக் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.