வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் காரணமாக ஆந்திரா மற்றும் ஒரிசாவின் வடக்கு கடற்கரை பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.
இதனையடுத்து விசாகப்பட்டினம் துறைமுகத்தில் அசானி புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருபப்தால் இன்று துறைமுகம் மூடப்பட்டுள்ளது. அதேபோல் மோசமான வானிலை காரணமாக இண்டிகோ நிறுவனம் 23 விமானங்களின் போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக விசாகப்பட்டினம் விமான நிலைய இயக்குநர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். அதேபோல் ஏர் ஏஷியா நிறுவனமும் 4 விமானங்களாஇ ரத்து செய்துள்ளதாக அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அசானி புயல் 105 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் கிழக்கு கடற்கரையை நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புயல் கரையை கடப்பதால் மே மாதம் 10ஆம் தேதியான இன்று இரவு 10 மணியிலிருந்து ஆந்திராவின் வடக்கு கடற்கரை பகுதிகளில் அதி கனமழையும் மற்றும் ஒடிசாவின் கடற்கரை பகுதிகளில் கனமழையும் பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள அசானி புயல் காரணமாக வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருக்காது எனவும், அதேசமயம் ஈரப்பத அதிகரிப்பு காரணமாக அசௌகர்யமான சூழல் உருவாகலாம் என தனியார் வானிலை முன்னறிவிப்பாளர் ஸ்கைமெட்டின் மகேஷ் பலாவத் தெரிவித்துள்ளார்.