இந்தியா

சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு 25 வீடுகளைப் பரிசளிக்கும் விவேக் ஓபராய்

சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு 25 வீடுகளைப் பரிசளிக்கும் விவேக் ஓபராய்

webteam

நாட்டை காக்கும் பணியில் மரணமடைந்த 25 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு, மும்பையில் 25 வீடுகளைப் பரிசளிக்கிறார், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் விவேக் ஓபராய், மும்பை புறநகரில் உள்ள தானே பகுதியில் தான் கட்டிவரும் அப்பார்ட்மெண்டில் 25 பிளாட்களைக் கொடுக்கிறார்.

இதில் நான்கு பிளாட்களை ஏற்கனவே விவேக் ஓபராய் ஒதுக்கிவிட்டார். அதில் மூன்று பிளாட்கள் சட்டிஸ்காரின் சுக்மா மாவட்டத்தில் நக்சல் தாக்குதலில் பலியான சி.ஆர்.பி.எப். வீரர்களின் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள பிளாட்கள் நாட்டைக் காக்க எல்லையில் சண்டையிட்டு மடிந்த துணை இராணுவப்படை வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது. சி.ஆர்.பி.எப். -இன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் விவேக் ஓபராய்க்கு நன்றி தெரித்து ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், நக்சல் தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் 12 பேருக்கு தலா 9 லட்சம் கொடுத்தார். ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், 12 பேரின் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கினார். மத்திய உள்துறை அமைச்சகம், மக்களின் நன்கொடையைப் பெற www.bharatkeveer.gov.in என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளது.