வெளிநாட்டு பத்திரிகைக்கு நிர்வாண போஸ் அளித்ததற்காக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகரும், நடிகை தீபிகா படுகோனேவின் கணவருமான ரன்வீர் சிங், துருக்கி நாட்டில் இருந்து வெளியாகும் 'Turkish Rug' என்ற இதழுக்கு அண்மையில் நிர்வாண போஸ் அளித்திருந்தார். அவரது நிர்வாணப் படங்கள் வெளியானதை அடுத்து, இந்திய திரையுலகில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
துணிச்சலாக நிர்வாண போஸ் கொடுத்ததற்காக ரன்வீர் சிங்குக்கு ஒருபுறம் பாராட்டுகள் வந்தாலும், இந்திய கலாச்சாரத்தை அவர் சீர்குலைத்துவிட்டதாக அவர் மீது விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன. இதனிடையே, நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் பெண்களின் உணர்வுகளை நடிகர் ரன்வீர் சிங் காயப்படுத்திவிட்டதாக கூறி அவர் மீது தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று போலீஸில் புகார் அளித்தது. இதன்பேரில், ரன்வீர் சிங் மீது மும்பை போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
விவேக் அக்னிஹோத்ரி ஆதரவு
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ரன்வீர் சிங் மீது போலீஸார் வழக்கு செய்திருப்பது முட்டாள்தனமானது மட்டுமல்லாமல் வேடிக்கையானதும் கூட. அந்தப் புகாரில், ரன்வீர் சிங்கின் நிர்வாணப் புகைப்படங்களால் பெண்களின் உணர்வு காயப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் எத்தனையோ பெண்களின் நிர்வாணப் படங்கள் இருக்கின்றன. இவற்றால் ஆண்களின் உணர்வு பாதிக்ப்படாதா? மனிதர்களின் உடல் நமது கலாச்சாரத்தில் எப்போதுமே போற்றப்பட்டிருக்கிறது. கடவுளின் அற்புதமான படைப்பு மனித உடல் ஆகும். ரன்வீர் சிங் செய்ததில் என்ன தவறு இருக்கிறது? அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது மிகவும் பிற்போக்குத்தனமான சிந்தனை என விவேக் அக்னிஹோத்ரி கூறியுள்ளார்.