பெண்கள் இன்று பல்வேறு துறைகளிலும் முன்னேறி, சாதனை படைத்துவரும் சூழலில், அவர்களுக்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருப்பதுதான் வேதனையான விஷயம். அதிலும் சில சமயங்களில் பெண்களே பெண்களுக்கு எதிரான வன்முறை செயல்களில் ஈடுவது சம்பவங்கள் கொடுமையாக இருக்கிறது. அப்படியான சம்பவம் ஒன்று, தற்போது கேரளாவில் நடைபெற்று, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கொல்லம் தேவலக்கரை நடுவிலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுமோல் தாமஸ். இவர், தன்னுடைய மாமியார் மற்றும் கணவர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் வயது முதிர்ந்த (80 வயது) மாமியாரான எலியம்மா வர்கீஸை, நாற்காலியில் இருந்து தள்ளிவிட்டு தாக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நாற்காலி ஒன்றில் எலியம்மா வர்கீஸ் அமர்ந்துள்ளார். அவரிடம் பேரக் குழந்தை ஒன்று அமர்ந்து கொஞ்சி விளையாடுகிறது. இந்தச் சூழலில் அவருக்கு எதிராக நாற்காலியில் அமர்ந்து, போன் பேசும் மருமகள் மஞ்சுமோல் தாமஸ், மாமியாரை கைகாட்டி வீட்டைவிட்டு வெளியே செல்லும்படி கூறுகிறார். அதைக் கேட்காமல் அமர்ந்திருக்கும் எலியம்மாவை, கோபத்தில் கொந்தளிக்கும் மஞ்சுமோல் ஓடிவந்து கீழே தள்ளிவிடுகிறார். அதில் கொப்புற விழுந்துகிடக்கும் காட்சி, பார்க்கும் எல்லோரையும் கண்களில் நீர் வரவழைத்து விடுகிறது.
இந்த வீடியோவை, அவரது கணவரே எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில், பாதிப்புக்குள்ளான எலியம்மா வர்கீஸ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
எலியம்மா மகன் ஜெய்சின் அளித்த புகாரின்பேரில், தற்போது மஞ்சுமோல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமோல் மீது பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் பிரிவு 24 மற்றும் ஐபிசி 308 (குற்றமில்லா கொலை முயற்சி) ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.