குழாயில் இருந்து வீணாகும் தண்ணீரை காய்ந்த இலைகளை கொண்டு அடைக்க முயற்சிக்கும் குரங்கின் வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது
இன்றைய தலைமுறைக்கே தண்ணீர் பஞ்சம் பெரும் அபாயமாக இருக்கிறது. இது, வரும் தலைமுறையை எந்தளவுக்கு அச்சுறுத்த போகிறது என்பது அனைவரையும் கவலை கொள்ளச்செய்கிறது. இந்திய அரசு தண்ணீர் சேமிப்பை பெரும் விழிப்புணர்வாகவே முன்னெடுத்து வருகிறது. கோடை காலங்களில் சென்னை உள்ளிட்ட பல நகரங்கள் தண்ணீர் பஞ்சத்தால் திண்டாடியதை யாரும் மறந்திருக்கவும் முடியாது.
தண்ணீரின் தேவையை மக்கள் உணர்ந்து தண்ணீரை சேமித்து, வீணாவதை தடுத்தால்தான் எதிர்கால சந்ததி தண்ணீர் பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம் என்பதே இன்றைய நிலை. தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்படுவது மனிதர்கள் மட்டுமல்ல. மற்ற உயிரினங்களும் தான்.
தண்ணீரின் தேவையை மனிதர்களைக் காட்டிலும் விலங்குகளே அதிகம் உணர்ந்திருக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக இணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. 14 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் குழாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியாகிறது. இதனைக் கண்ட குரங்கு தன் கைகளால் அதனை தடுத்து பார்க்கிறது.
பிறகு கீழே கிடந்த காய்ந்த இலைகளை எடுத்து குழாயில் அழுத்தி தண்ணீர் வீணாவதை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து தண்ணீரின் தேவை குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்