மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் காலணிகளை ஒருமுறை சோதித்து விட்டு, பின்னர் அணிவது பல ஆபத்தில் இருந்து நம்மை காக்க உதவும். பயிற்சியை முடித்த பின் இரு காவலர்கள் தங்கள் காலணிகளை (Shoes) அணியத் துவங்கும்போது காலணிக்குள் வித்தியாசமாக ஒரு உயிரினம் இருப்பதை கண்டு குழப்பம் அடைந்துள்ளனர். காலணிக்குள் இருந்தது பாம்பு என தெரிய வர இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
காலணிக்குள் இரும்புக் கம்பியை விட்டு பாம்பை வெளியே இழுக்க முயன்றபோது, அந்த பாம்பு படமெடுத்தது. இருப்பினும் பாம்பை லாவகமாக பிடித்த இருவரும் அதை காயம் ஏற்படாமல் பிடித்து வெளியில் விட்டனர். இந்த வீடியோவை இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மழைக்காலத்தில் பாம்புகள் மிகவும் வித்தியாசமான இடங்களில் காணப்படுவதால், மக்கள் கவனமாக இருக்குமாறு அவர் எச்சரித்தார். இந்த வீடியோ லட்சத்திற்கு மேற்பட்ட பார்வைகளை பெற்று வைரலாக பரவி வருகிறது.