இந்தியா

”கண்ணியத்துடன் செயல்படுங்கள்”- தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்த அட்வைஸ்!

”கண்ணியத்துடன் செயல்படுங்கள்”- தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்த அட்வைஸ்!

webteam

வன்முறைக் காட்சிகளை ஒளிபரப்புவது குறித்து அனைத்துத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

சமீபகாலமாக, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆபாசம், இரட்டை அரத்த வசனங்கள், வன்முறைக் காட்சிகள் ஆகியன அதிகளவில் அரங்கேறி வருவதாக விமர்சனங்கள் எழுகின்றன. இதுபோன்ற காட்சிகள் முகம் சுளிக்க வைப்பதுடன், குழந்தைகளை தவறான பாதைக்கும் இழுத்துச் செல்வதாகவும் உள்ளது எனவும் சில வன்முறைக் காட்சிகளால் குழந்தைகள் அச்சம் கொள்ளவும் செய்கின்றனர் எனவும் அந்த விமர்சனங்களில் குறிப்பிடப்படுகின்றன.

இந்த நிலையில், தொலைக்காட்சிகளில் விபத்துகள், இறப்புகள், பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்டவை குறித்து செய்தி வெளியிடும்போது கண்ணியத்துடன் வெளியிட வேண்டும் என அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொலைக்காட்சிகளில் தனிநபர்களின் இறந்த உடல்கள் மற்றும் காயமடைந்த நபர்களின் படங்கள்/வீடியோக்கள் காட்டப்படுகின்றன. அதில் சுற்றிலும் ரத்தம் சிதறிக் கிடப்பது, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் இரக்கமின்றி அடிக்கப்படுவது, ஆசிரியரால் அடிக்கப்படும் குழந்தைகள் தொடர்ச்சியாக அழுவது போன்ற காட்சிகளும் இடம்பெறுகின்றன. அவற்றை, தொலைக்காட்சி அலைவரிசைகள் மங்கலாகக் காட்டாமலும், முன்னெச்சரிக்கை வாசகங்கள் இல்லாமலும், வட்டமிட்டு பல நிமிடங்களுக்கு மீண்டும் மீண்டும் காட்டுகின்றன. இதுபோன்ற சம்பவங்களைப் செய்திப்படுத்தும் விதம் பார்வையாளர்களுக்கு வெறுக்கத்தக்கதாகவும் வேதனை அளிப்பதாகவும் உள்ளது.

வயதானவர்கள், நடுத்தர வயதுடையவர்கள், சிறு குழந்தைகள் மற்றும் பல்வேறு சமூக-பொருளாதாரப் பின்னணிகளைக் கொண்ட குடும்பங்களைக் கொண்டவர்கள் பொதுவாகப் பார்க்கும் தளமாக தொலைக்காட்சி உள்ளதால், நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களை ஒளிபரப்புவதில் ஒளிபரப்பாளர்களிடையே பொறுப்புணர்ச்சியும், கட்டுப்பாடும் வேண்டும்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் இருந்து எடுக்கப்பட்டு, எவ்வித மாற்றங்களும் இல்லாமல் ஒளிபரப்பப்படுகிறது. தொலைக்காட்சி அலைவரிசைகளில் இதுபோன்ற காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதை தொடர்ந்து கண்காணித்ததையடுத்தே, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கீழ்க்கண்ட ஆலோசனையை வழங்கியுள்ளது.

முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட தொலைக்காட்சி அலைவரிசைகளின் பார்வையாளர்கள் தன்மையையும், பொது நலனையும் கருத்தில்கொண்டு, அனைத்து தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளும் குற்றம், விபத்துகள் மற்றும் வன்முறைச் சம்பவங்களை காட்சிப்படுத்தும்போது விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் வன்முறை, ஆபாசம் இடம்பெறுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்