கன்வார் யாத்திரை எக்ஸ் தளம்
இந்தியா

கன்வார் யாத்திரை | மோதிய கார்.. வெடித்த வன்முறை.. பள்ளிகளுக்கு விடுமுறை.. பாதுகாப்பில் போலீஸ்!

கன்வார் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் சிலர் கடந்த சில நாட்களாக வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வரும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Prakash J

உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கன்வார் யாத்திரை நடத்தப்படுகிறது. இந்த யாத்திரையின்போது சிவபக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாகச் சென்று சிவாலயங்களில் வழிபடுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான கன்வார் யாத்திரை, கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை, ஆகஸ்ட் 6ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த யாத்திரையின்போது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் இருக்கும் உணவகங்கள், உணவு வண்டிகளில் உணவக பெயர்ப் பலகையில் அதன் உரிமையாளர் பெயர் இடம் பெறவேண்டும் என முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டது. உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 22ஆம் தேதி இடைக்கால தடை விதித்தது. மேலும், இதுதொடர்பான வழக்கும் விசாரணையில் உள்ளது.

இதையும் படிக்க: “சக்கரவியூகத்தில் 6 பேர்” - பட்ஜெட் விவாதத்தில் பாஜக அரசைக் கடுமையாகச் சாடிய ராகுல் காந்தி!

இதற்கிடையே, கன்வார் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் சிலர் கடந்த சில நாட்களாக வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வரும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஜூலை 21ஆம் தேதி முஜாபர் நகரில் இஸ்லாமிய டிரைவரும் அவர் ஓட்டி வந்த காரும் அடித்து நொறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜூலை 24ஆம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை கன்வார் யாத்ரீகர்கள் கட்டைகளால் சரமாரியாக தாக்கினர். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன.

இந்த நிலையில், தற்போது மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. கடந்த ஜூலை 27ஆம் தேதி, முராத்நகரில் உள்ள ரவாலி சாலை அருகே சென்ற கன்வார் யாத்ரீகர்கள் மீது கார் ஒன்று மோதியதில், அவர்கள் கொண்டுசென்ற புனித நீர் குடம் உடைந்து ஓடியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த யாத்ரீகர்கள் அந்த கார் டிரைவரை வெளியே இழுத்து சரமாரியாக தாக்கினர். அவர் ஓட்டி வந்த காரையும் நாசம் செய்ததாகக் கூறப்படுகிறது.

டிரைவர் குடிபோதையில் இருந்ததாகவும், மேலும் அவர் தவறான பக்கத்தில் காரை ஓட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் வன்முறை வெடித்துள்ளது. காவல் துறையினருக்கும் யாத்ரீகர்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்த வாக்குவாதத்தின்போது அரசு வாகனங்களை எல்லாம் யாத்ரீகர்கள் அடித்து நாசம் செய்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து, காசியாபாத் காவல் துறை, மாவட்டத்தின் சில பகுதிகளில் பாதுகாப்பை தீவிரப்படுத்தியது மற்றும் போக்குவரத்து தடைகளை விதித்தது. இதற்கிடையே, கன்வார் யாத்திரையை முன்னிட்டு, வன்முறை நடைபெற்ற காசியாபாத் மாவட்டத்தில் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சாவர்க்கர் சர்ச்சை கருத்து| வரலாற்றைத் திரித்ததாக விமர்சனம்.. மன்னிப்பு கேட்ட இயக்குநர் சுதா கொங்கரா