சமீபகாலமாக வடகிழக்கு மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது திரிபுராவிலும் வன்முறை சம்பவம் காரணமாக இன்டெர்நெட் துண்டிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவின், தலாய் மாவட்டத்தில் உள்ள கந்தசெரா கிராமத்தில் கடந்த ஜூலை 7ஆம் தேதி கண்காட்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு உள்ளூர் குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், பரமேஸ்வர் ரியாங் எனும் இளைஞர் தாக்குதலுக்குள்ளானார். பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். என்றாலும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துபோனார். இதனால் கோபமடைந்த அவரது உறவினர்களும் ஊர் மக்களும் நியாயம் கேட்டு போராடினர். ரியாங்கின் மரணத்திற்கு காரணமானவர்களைக் கைது செய்யக்கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டமும் வன்முறையாக மாறியது. வன்முறை வெடித்ததால் பல கடைகள் தீவைக்கப்பட்டன. பொதுமக்கள் பலர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்.
இதனையடுத்து உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டு, கலவரத்தில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தொடர்ந்து வன்முறை அதிகரிக்காமல் இருக்க, அப்பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இன்டெர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.