பெங்களூருவில் எம்.எல்.ஏ வின் உறவினர் பதிவிட்ட ஃபேஸ்புக் கருத்தால் கலவரம் வெடித்தது. இதனையடுத்து போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.
பெங்களூரு - புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் தங்கை மகன் நவீன். மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் விதமான கருத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து டி.ஜே.ஹள்ளி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் மீது வழக்குப்பதிவு செய்ய மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆத்திரமுற்ற அப்பகுதி மக்கள், காவல் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் கற்கள் வீசப்பட்டதோடு, வாகனங்களும் தீ வைக்கப் பட்டன.
பைசந்திரா பகுதியில் உள்ள எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் வீடும் கல் வீசித் தாக்கப்பட்டது. ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. நிலைமை மோசமானதால், காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 2 பேர் உயிரிழந்ததாகவும் 60-க்கும் அதிகமானோர் படுகாயமுற்றதாகவும் பெங்களூரு காவல் ஆணையர் கமல் பான்ட் கூறினார்.
வன்முறை தொடர்பாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவும், டி.ஜி.ஹள்ளி, கே.ஜி. ஹள்ளி காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலைமை குறித்து காவல் துறையினரிடம் கேட்டறிந்த முதலமைச்சர் எடியூரப்பா, அமைதியை நிலைநாட்டுமாறு அறிவுறுத்தியுள்ளார்.