கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் பலர் தேவையில்லாமல் வெளியில் நடமாடுகின்றனர். இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வலம் வருகிறார்கள்.
கிராமப்பகுதிகளில் இளைஞர்கள், சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். அனைவரையும் காவல்துறை கண்காணிக்க முடியாது என்பதால் மக்கள் தாங்களாகவே சுயக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமென்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் அதனையும் மீறி வெளியில் நடமாடுபவர்களை பறந்து பறந்து துரத்துகிறது ட்ரோன் கேமரா.
ஓரிடத்தில் இருந்துகொண்டே ட்ரோன்களை இயக்கும் போலீசார், கூட்டமாக நின்றாலோ, விளையாடிக் கொண்டு இருந்தாலோ அவர்களை நோக்கி இயக்கி அலற விடுகிறார்கள். தமிழகத்தில் மதுரையில் ட்ரோன் மூலம் கூட்டம் கூடியவர்களை ஓட ஓட விரட்டிய காட்சி வைரல் ஆனது. முக்கியமான விஜயின் மாஸ்டர் படத்ஹ்டின் வாத்தி ரெய்டு பாடலை பின்னணியாக பயன்படுத்தியது பலரையும் ரசிக்க வைத்தது.
அதேபோல் ஒரு காட்சியை கேரள போலீசார் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். கிரிகெட் வர்ணனையுடன் ஒப்பிட்டு அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ட்ரோன் கேமராவைக் கண்டது. முகத்தை மூடிக்கொண்டு இளைஞர்கள் அலறி ஓடுகின்றனர். இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
இதேபோல், காஞ்சிபுரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு பகுதியில் பரமபதம் விளையாடிய கும்பல் போலீஸாரின் ட்ரோன் கேமராவை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். இந்தக் காட்சிகளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.