வினேஷ் போகத் முகநூல்
இந்தியா

காவல்துறை பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளதா? வினேஷ் போகத் குற்றச்சாட்டும் டெல்லி காவல்துறை பதிலும்!

PT WEB

இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன், தன் பதவிக்காலத்தில் தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வீராங்கனைகள் புகார் எழுப்பியிருந்தனர்.

இதில் நீதிகேட்டு மல்யுத்த வீரர் வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் கடந்த வருடம் தொடக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிரிஜ் பூஷன் மீது டெல்லி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் எடை கூடுதலாக இருந்ததால் பதக்க வாய்ப்பை இழந்த வினேஷ் போகத் நாடு திரும்பியதும் தங்களது போராட்டம் தொடரும் என அறிவித்திருந்தார். இந்த பின்னணியில் தற்போது வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை டெல்லி காவல்துறை விலக்கிக்கொண்டிருப்பதாக வினேஷ் போகத் தமது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வினேஷ் போகத்தின் பதிவைத் தொடர்ந்து, ‘பாதுகாப்பை விலக்கிக்கொள்ள எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை’ என டெல்லி காவல்துறை விளக்கமளித்துள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் சென்று சேராததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் டெல்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.