இந்தியா

”பொருளாதார மந்த நிலையால் 11 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம்” - ’விமியோ’ சிஇஓ அனுப்பிய மெயில்!

”பொருளாதார மந்த நிலையால் 11 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம்” - ’விமியோ’ சிஇஓ அனுப்பிய மெயில்!

JustinDurai

பிரபல வீடியோ ஹோஸ்டிங் தளமான விமியோ தனது 11 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

உலகளாவிய பொருளாதார மந்த நிலை அச்சத்தினால் பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியாளா் குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகின்றன. இதனால் கடந்த 2022ஆம் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஐ.டி ஊழியர்கள் வேலையை இழந்தனர். இப்படியிருக்கையில் 2023ஆம் ஆண்டிலும்  பணியாளா் குறைப்பு நடவடிக்கை தொடர்கிறது.  

பிரபல வீடியோ ஹோஸ்டிங் தளமான விமியோ கடந்த புதன்கிழமை வெளியிட்டு உள்ள அறிவிப்பில் உலகளாவிய தனது வர்த்தகத்தில் 11 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அந்நிறுவனம் அமெரிக்கப் பங்குச்சந்தையில் அறிக்கையாகச் சமர்ப்பித்துள்ளது.

இதுதொடா்பாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஞ்சலி சுட் பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ''பொருளாதார நிச்சயமற்ற சூழலில் 2023ஆம் ஆண்டிற்குள் புது உத்தியுடன் நுழைந்திருக்கிறோம். விமியோவின் 11 சதவீத ஊழியர்களை குறைக்கும் கடினமான முடிவை எடுத்திருக்கிறோம். ஒரு கடினமான கால சூழலில் இது பலரது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நிச்சயமற்ற பொருளாதாரச் சூழலில் விமியோவை வெற்றிகரமான நிறுவனமாக தொடர்வதற்கு இத்தகைய நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதது. வலுவான இருப்புநிலையை அடைவதற்கும் நிலையான லாபம் ஈட்டுவதற்கும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை தேவையானதாக  இருக்கும்.

மனிதநேயம் முக்கியம் என்பதையும் நான் அறிவேன். வெளியேறும் பணியாளர்களின் வலியை நான் நன்கறிவேன். மேலும் விமியோ வளர்ச்சிக்காக ஒவ்வொரு நபரும் ஆற்றிய பங்களிப்புக்காக நன்றி கூறுகிறேன். அதேநேரம் விமியோ நிறுவனத்துக்காக நான் எவ்வளவு முதலீடு செய்துள்ளேன் என்பதையும் அறிய வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்று அதில் தெரிவித்துள்ளார்.