உ.பி விகாஸ் துபே முகநூல்
இந்தியா

உ.பி | 7 முறை தன்னை பாம்பு கடித்ததாக கூறிய இளைஞர்... உண்மை என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்!

உத்தரப்பிரதேசத்தில் 7 முறை தன்னை பாம்பு கடித்ததாக கூறிய விகாஷிற்கு மன ரீதியான பாதிப்புள்ளதாக உ.பி மருத்துவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தரப்பிரதேசத்தின் சௌரா கிராமத்தில் வசித்து வருபவர் 24 வயதான விகாஸ் துபே. கடந்த ஜூன் 2 ஆம் தேதி துபே தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரை பாம்பு கடித்துள்ளது. இதை அறிந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்றபின் உடல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இதனைதொடர்ந்து, இந்த சம்பவம் நடைபெற்ற 8 நாட்களிலேயே மீண்டும் தன்னை பாம்பு கடித்துள்ளது எனக்கூறியிருக்கிறார். இதனால் மீண்டும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் குடும்பத்தினர். சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபொழுதே மூன்றாம் முறையாக, சரியாக கடந்த ஜூன் 17 ஆம் தேதி தன்னை மீண்டும் பாம்பு கடித்துள்ளது என்றுள்ளார். ஒருகட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது அவருக்கு சுயநினைவு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இதிலிருந்து தப்பித்து செல்ல தனது அத்தையின் வீட்டிற்கு சென்ற விகாஸ், அங்கேயும் பாம்பு கடியால் அவதி அடைந்ததாக தெரிவித்துள்ளார். இதன்படி, கடந்த ஜூன் 2 ஆம் தேதி முதல் ஜூலை 7 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 7 முறை இவர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இது குறித்து விகாஷ் மருத்துவர்களிடம் தெரிவிக்கையில், “சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே என்னை பாம்பு கடிக்கிறது. அவை என்னை கடிக்கப்போகிறது என்று என்னால் முன்கூட்டியே உணர முடிகிறது. 9 ஆவது முறை என்னை பாம்பு கடிக்கும்போது நான் இறந்துவிடுவேன் என்று பாம்பே எனது கனவில் வந்து கூறியது” என்று தெரிவித்துள்ளார்.

இதனால், குழப்பமடைந்த மருத்துவர்கள், “உண்மையிலே இவரை பாம்புதான் கடித்ததா...?” என்று சந்தேகித்துள்ளனர்.

இதனையடுத்து, விகாஸ் துபேயின் இந்த பிரச்னைக்கு தீர்வு காண, பத்தேபூர் ஆட்சியர் இந்துமதியின் உத்தரவின் பேரில் 3 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

பாம்பு

இந்நிலையில் கடந்த ஜூலை 16 ஆம் தேதி, இதுகுறித்து மருத்துவக்குழு அறிக்கை வெளியிட்டதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இந்த மருத்துவ அறிக்கையின்படி “விகாஸை ஒரே ஒருமுறை மட்டுமே பாம்பு கடித்துள்ளது. முதல் முறை பாம்பு கடித்தபோது ஏற்பட்ட அச்சம் (Snake Phobia) காரணமாகவே, தன்னை 7 முறை பாம்பு கடித்ததாக விகாஸ் தெரிவித்துள்ளார். இவரை 7 முறை பாம்பு கடிக்கவில்லை. ஒருமுறைதான் கடித்துள்ளார். இவருக்கு மனநல சிகிச்சை தேவை” என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.