இந்தியா

“நூறு சதவிகிதம் கடனை திருப்பிச் செலுத்தத் தயார்” - விஜய் மல்லையா

“நூறு சதவிகிதம் கடனை திருப்பிச் செலுத்தத் தயார்” - விஜய் மல்லையா

webteam

வங்கிக்கடனை 100 சதவிகிதம் திருப்பிச் செலுத்தத் தயாராக இருப்பதாக பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் இருந்து பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தாமல் லண்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதுதொடர்பாக வங்கிகளின் சார்பாக லண்டன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது மல்லையா நாடு கடத்தப்பட்டால் மும்பை சிறையில் அடைக்க வாய்ப்புள்ளதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. படுக்கை, மேற்கத்திய கழிப்பறை வசதிகள் கொண்ட சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறி அதற்கான புகைப்படங்களை சமர்ப்பித்தது. இந்தியா தெரிவிக்கும் வகையில் சிறையில் வசதிகள் இருக்காது என்று மல்லையா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் வங்கிக்கடனை 100 சதவிகிதம் திருப்பிச் செலுத்தத் தயாராக இருப்பதாக பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் தாம் திரும்ப செலுத்தும் கடன் தொகையை வங்கிகள் மற்றும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும், அதை வங்கிகள் ஏற்க மறுத்தால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று மட்டும் கேட்டுக் கொண்டுள்ளார். 

மற்றொரு பதிவில் கடந்த‌ 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரசின் கஜானாவை தமது கிங் ஃபிஷர் நிறுவனத்தின் லாபத் தொகை மூலம் நிரப்பியதாகவும், அந்த நிறுவனம் தற்போது நஷ்டத்தில் இருந்தாலும், முழுக்கடனை திருப்பிச் செலுத்த தாம் தயாராக இருப்பதாக விஜய் மல்லையா பதிவிட்டுள்ளார்.