யானைகள் என்றால் யாருக்குதான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விக்க செய்யும் ஒரு உயிரினம் என்றால் அது யானைதான். அவ்வாறான யானைகள் தொடர்ந்து வேட்டையாடப்படும் செய்திகள் மனதுக்கு கவலையை ஏற்படுத்தினாலும், இணையதளத்தில் அவ்வப்போது வெளியாகும் யானைகளின் சுட்டித்தனம் மனதுக்கு நெருக்கமாக இருக்கும்.
உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. மனிதர்கள் எல்லாம் வீட்டிலேயே ஒரு மாதத்துக்கும் மேலாக அடைக்கப்பட்டிருக்க, மனிதர்கள் இல்லாத சாலைகளில் ஜாலியாக விலங்குள் உலாவி வருகின்றன.
பல்வேறு நாடுகளில் இருக்கும் காட்டுயிர் ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகளும் விலங்குகளின் பல்வேறு வீடியோக்களை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். இப்படிதான் இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான பர்வீன் கஸ்வான் விலங்குகளின் விநோத நடவடிக்கைகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவார். அப்படிதான் இரண்டு வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அதில் ஆப்பிரிக்க காடுகளில் ஆற்றில் இறங்கும் யானைகளின் செயலையும், இந்தியாவின் மலைப் பிரதேசக் காடுகளில் சரிவுப் பாதைகளில் யானை எவ்வாறு இறங்கும் என வீடியோவாக பதிவிட்டிருந்தார்.
இந்த இரு வீடியோக்களிலும் சரிவுகளில் யானைகள் குழந்தைகள் போல நான்கு கால்களையும் மடக்கியவாறு சரிந்துக்கொண்டே இறங்குகிறது. இது பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், இதுதான் உண்மை. யானைக்கு உடல் கனம் மிக அதிகம் என்பதால் மலைப்பாதை சரிவுகளில் இறங்குவதற்கு மிகவும் யோசிக்கும். எங்கே தான் விழுந்துவிடுவோமா என அச்சப்படும். பொதுவாக யானை சரிவுகளில் இறங்கும்போது, மரக்கிளைகளில் ஏதோ ஒன்றை தனது தும்பிக்கையால் ஊன்றியவாறே இறங்கி வரும். அதனால்தான் காட்டில் யானையிடம் சிக்கிக்கொண்டால் சரிவை நோக்கி ஓட வேண்டும் என கூறுவார்கள். ஆனால் மேடுகளில் யானைகள் லாவகமாகவும் வேகமாகவும் பயணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.