தற்காலத்தில் வார நாட்களில் பரபரப்பாக இயங்கும் குடும்பங்கள், இயந்திர தனத்திலிருந்து விடுபட்டு தங்களது குடும்பத்துடன் வார விடுமுறை நாட்களில் கடற்கரை, சினிமா, பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக நாளை செலவிடுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், அப்படி மகிழ்ச்சியாக அமைய வேண்டிய நிலையில், மகாராஷ்ட்ரா மும்பையில் ஒரு குடும்பத்திற்கு சோக நாளாக அமைந்துவிட்டது.
மும்பையில் உள்ள ரபேல் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ். இவரது மனைவி ஜோதி சோனார் (32). இந்த தம்பதி தங்களது மூன்று குழந்தைகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 9 ஆம் தேதி) ஜூகு கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டு அங்கு சென்றிருந்தனர். ஆனால், அங்கு கடல் சீற்றம் காரணமாக மிகப்பெரிய அலைகள் எழுந்து அச்சுறுத்தியதால், அவர்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை. பின்னர் தங்களது திட்டத்தை மாற்றி, பாந்த்ரா துறைமுகத்துக்கு சென்றுள்ளனர். அங்கு கடல் சீற்றம் அதிகரித்தே காணப்பட்டது.
இந்நிலையில், முகேஷ்-ஜோதி தம்பதி பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்ட் கடற்கரையில் சிறிது தூரத்தில் இருந்த பாறையில் அமர்ந்து வீடியோ மற்றும் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர். அந்த தம்பதியின் குழந்தைகள் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த நிலையில், கணவரின் கைகோர்த்தப்படி மகிழ்ச்சியாக ஜோதி வீடியோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வண்ணம் ஒரு பெரிய அலை அவர்களை நெருங்கி வந்தபோதே குழந்தைகள் ‘மம்மி, மம்மி’ என்று கத்தி கூச்சலிட்ட நிலையில், சில நிமிடங்களில் அந்த பெரிய அலை முகேஷ்-ஜோதி தம்பதியை இழுத்துச் சென்றது. அப்போது முகேஷ் தனது மனைவியின் சேலையை இழுத்துப் பிடிக்க முயற்சி செய்தும், அவர் கடல் நீரில் மூழ்கத் தொடங்கினர்.
எனினும் இதனைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களில் சிலர் முகேஷின் கால்களை பிடித்து இழுத்து காப்பாற்றினர். மேலும், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, தீயணைப்புத் துறை வீரர்களுடன் சேர்ந்து தேடுதல் முயற்சியில் ஈடுபட்டனர். கடல் நீரில் மூழ்கிய நிலையில், ஜோதியின் உடல், கடந்த திங்கள்கிழமை இந்திய கடலோர காவல்படையால் மீட்கப்பட்டது. பின்னர் காவல்துறையிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டு கூப்பர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. நடந்த இந்த சம்பவங்கள் அனைத்தும் வீடியோவில் பதிவான நிலையில், இந்த வீடியோ தற்போது சமூவலைத்தளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை பதறவைத்துள்ளது.