இந்தியா

பீகார்: 5 காவலர்களை லாக்-அப்பில் அடைத்து வைத்த எஸ்.பி! காரணம் என்ன?

பீகார்: 5 காவலர்களை லாக்-அப்பில் அடைத்து வைத்த எஸ்.பி! காரணம் என்ன?

webteam

பீகாரில் 5 காவலர்களை மாவட்ட எஸ்.பி. லாக் - அப்பில் வைத்த வீடியோ காட்சிகள் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளளது.

பீகார் மாநிலம் நவாடா பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு 9 மணியளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌரவ் மங்களா பதிவான வழக்குகளை மறுஆய்வு செய்ய வந்ததாக கூறப்படுகிறது. அப்போது காவல் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியாக இல்லாததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌரவ் மங்களா அதிருப்தி அடைந்தார்.

இதற்காக அந்த காவல்நிலையத்தை சேர்ந்த சத்ருகன் பாஸ்வான் மற்றும் ராம்ரேகா சிங் என்ற இரண்டு உதவி ஆய்வாளர்கள், சந்தோஷ் பாஸ்வான், சஞ்சய் சிங் மற்றும் ராமேஷ்வர் உரான் ஆகிய 3 காவலர்களை சுமார் 2 மணி நேரம் லாக் - அப்பில் அடைத்து வைத்தார். நள்ளிரவில் 12 மணியளவில் தான் அவர்களை வெளியில் திறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் எஸ்.பி.யின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த காவலர்கள் சங்கம், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் காவலர்களை சிறையில் எல்லாம் தான் அடைக்கவில்லை என்று எஸ்.பி. கௌரவ் மங்களா தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பீகார் தலைமைச் செயலர், அனைத்து மூத்த அதிகாரிகளுக்கும் தங்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களை கையாள்வதில் "தீவிர நடவடிக்கைகளை நாட வேண்டாம்" என்று உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.