டிரைவர் கார்த்திக், பிரஜ்வல் pt web
இந்தியா

பிரஜ்வலின் EX - டிரைவர் வெளியிட்ட வீடியோ.. சிக்கலில் பாஜக தலைவர்.. டிரைவர் கார்த்திக் கூறியது என்ன?

Angeshwar G, PT WEB

கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதி எம்பியான 33 வயது பிரஜ்வல் ரேவண்ணா, பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தற்போது அதே மக்களவை தொகுதியில் இம்முறை போட்டியிட்டார். கடந்த வாரம் அங்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்திவருகிறது. அவர் மேல் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 ஏ, 354 டி, 506 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் ஹோலநரசிப்பூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

டிரைவர் கூறியது என்ன?

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான வீடியோக்களை கொடுத்தவர், அதை ஒப்புக்கொண்டு வீடியோ வெளியிட்டுள்ளார். 6 நிமிடங்களைக் கொண்ட அந்த வீடியோவில், “15 ஆண்டுகளாக பிரஜ்வலுக்கு கார் ஓட்டிய நிலையில், அங்கு நடந்த அனைத்து விவகாரங்களும் எனக்கு தெரியும். வீடியோக்களை ரேவண்ணா குடும்பத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய பாஜகவைச் சேர்ந்த தேவராஜ கவுடாவிடம், ஓராண்டுக்கு முன் கொடுத்திருந்தேன்” என கூறியுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில், “இது தொடர்பாக வீடியோக்களை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எவர் ஒருவரிடமும் நான் கொடுக்கவில்லை. நான் காங்கிரஸ் கட்சியிடம் கொடுக்க நினைத்திருந்தால் நான் ஏன் தேவராஜ கவுடாவிடம் செல்ல வேண்டும்? ஆகவே அவரைத் தவிர வேறு யாருக்கும் நான் இதைக் கொடுக்கவில்லை.

பிரஜ்வல்

பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சுமார் 15 ஆண்டுகள் கார் ஓட்டியுள்ளேன். நான் அவரிடம் பணி செய்தபோது, எனது நிலத்தை வலுக்கட்டாயமாக அவர்களது பெயருக்கு மாற்றி, என்னையும் எனது மனைவியையும் துன்புறுத்தினர். அதனால் ஓராண்டுக்கு முன்பு பணியில் இருந்துவெளியேறிவிட்டேன்.

யாரும் எனக்கு நியாயத்தை பெற்றுத்தர முன்வரவில்லை. எனவே, அப்போது ரேவண்ணா குடும்பத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய தேவராஜ கவுடாவை அணுகி அவரிடம் பிரச்சனையை விளக்கினேன். பிரஜ்வால் குடும்பத்தினருக்கு எதிராக தேவராஜகவுடா சட்டப்போராட்டம் நடத்தியபோது, அந்த வீடியோக்களையும் படங்களையும் தன்னிடம் கொடுக்கச் சொன்னார். அதை யாரிடமும் கொடுக்கமாட்டேன் என்றும் உறுதி அளித்தார்.

இந்நிலையில் தற்போது அதை அவர் தனது சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டாரா என்பது எனக்குத் தெரியவில்லை. என்மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். இந்த விவகாரத்தில், சிறப்பு புலனாய்வு விசாரணை குழு முன்பு ஆஜராகி அனைத்து சம்பவங்களுக்கும் விளக்கம் அளிக்க உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

இதேசூழலில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி தேவராஜ் கவுடா பாஜகவின் கர்நாடக மாநிலத்தலைவர் விஜயேந்திராவுக்கு எழுதிய கடிதத்தில், “பிரஜ்வல் உட்பட அவரது குடும்பத்தினரின் மேல் பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த வீடியோக்கள் பாதிக்கப்பட்ட பெண்களை மீண்டும் அத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுவதற்காக மிரட்டப் பயன்பட்டன. நாம் அவர்களுடன் கூட்டணி வைத்தால் இந்த விவகாரம் நமக்கு எதிராக பயன்படுத்தப்படலாம். நமது பெயருக்கு அடியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார். அந்தக் கடிதம்:

ஜேடி (எஸ்) கட்சியில் இருந்து பிரஜ்வல் இடைநீக்கம்

Brajwal Revanna MP

இப்படியான தொடர் விஷயங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதில் தற்போது பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிக்கு தப்பிச்சென்றதாக கூறப்படும் நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடி ஆலோசித்தது.

பிரஜ்வலை இடைநீக்கம் செய்ய வேண்டும் என அக்கட்சியின் நிர்வாகிகள் பரிந்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து பிரஜ்வலை இடைநீக்கம் செய்வதாக, அக்கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி நேற்று அறிவித்தார். அதுமட்டுமின்றி, இது அவரது தனிப்பட்ட விவகாரம், இதில் ஏன் கட்சியை இழுக்கின்றீர்கள் என்று தங்களது தரப்பை விலக்கிக் கொண்டார். அதேசமயத்தில் காங்கிரஸ், பாஜகவையும் விமர்சிக்கத் தவறவில்லை. “கூட்டணியில் இருக்கும் வேட்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், பாஜகவும், பிரதமரும் மௌனம் காப்பது ஏன்?” என காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சிறப்பு புலனாய்வுக்குழு அனுப்பிய நோட்டீஸ்

இதற்கிடையே, கர்நாடக எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, அம்மாநில டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. ஏற்கனவே பிரஜ்வல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு மாநில மகளிர் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது. தற்போது, டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

ரேவண்ணா, பிரதமர் மோடி, பிரியங்கா காந்தி

அதேசமயத்தில் எம் பி பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவருடைய தந்தை எச் டி ரேவண்ணா ஆகியோர் பாலியல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு 24 மணி நேரத்தில் ஹோலெனரசிபுரம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என சிறப்பு புலனாய்வு விசாரணை குழு அதிகாரிகள் அவர் வீட்டில் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.