உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏவை வழக்கறிஞர் ஒருவர் அறைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பாஜக எம்எல்ஏ யோகேஷ் வர்மா, தனது ஆதரவாளர்கள் மற்றும் காவல் துறையினருடன் நடந்து வருகிறார். அப்போது உள்ளூர் பார் அசோசியேஷன் தலைவர் அவதேஷ் சிங், அவர் எதிரே சென்று யோகேஷ் வர்மா கன்னத்தில் அறைவிடுகிறார். உடனே போலீஸார் அவரைத் தடுத்துவிடுகின்றனர். ஆனாலும் வழக்கறிஞர் அறைந்ததைத் தொடர்ந்து, வர்மாவின் ஆதரவாளர்கள் வழக்கறிஞரை இழுத்துச் சென்று தாக்கினர்.
பாஜக எம்.எல்.ஏ.வை வழக்குரைஞர் ஒருவர் காவல் துறையினருக்கு மத்தியில் கன்னத்தில் அறைந்த இந்த விவகாரத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. காவல் துறையினர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் நகர்ப்புற கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு தேர்தல் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று (அக். 9) அறிவிக்கப்பட்டிருந்தது. வேட்புமனுவைத் திரும்பப் பெற நாளை (அக். 10) கடைசி நாள். இறுதிப் பட்டியல் நாளை மறுநாள் (அக். 11) வெளியிடப்படவுள்ளது. இந்தத் தேர்தலில் வாக்களிக்க 12 ஆயிரம் பேர் தகுதியுடையவர்கள் என புள்ளி விவரம் கூறுகிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் மும்முரமாகி வரும் நிலையில், தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பாஜக மாவட்ட தலைவர் சுனில் சிங், எம்.எல்.ஏ. யோகேஷ் வர்மா பெயரிடப்பட்ட கடிதம் ஒன்று பரவலாக பகிரப்பட்டு வந்தது. தேர்தல் ஏற்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அதில் குற்றம் சாட்டியிருந்தனர். இதுவே வழக்கறிஞர் அந்த எம்.எல்.ஏ-வை அறைந்ததற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக இப்பிரச்னை தொடர்பாக உத்தரவு பிறப்பித்த மாவட்ட கூடுதல் நீதிபதி சஞ்சய் சிங், திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் எனத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.