மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் பர்தேசிபுரா பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமை அன்று, உடல் நிலை சரியில்லையென சோனு என்ற இளைஞர் மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வந்துள்ளார். அப்போது, மருத்துவரிடம் தனக்குள்ள பிரச்னைகளை குறித்து சோனு தெரிவிக்கவே, மருத்துவரும் அவருக்கு பரிசோதிக்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், பேசிக்கொண்டிருந்த சோனு திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட மருத்துவரும், செவிலியரும், சோனுவுடன் வந்த நண்பர் ஒருவரும் உடனடியாக அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.
ஆனால், சம்பவ இடத்திலேயே சோனு உயிரிழந்துள்ளார். இதுகுறித்தான காட்சிகள் மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருக்கும் சூழலில், சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட பிரேத பரிசோதனையில், மாரடைப்பு காரணமாக சோனு உயிரிழந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்புதான் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் முகமது சுகைல் என்ற MBA முதலாம் ஆண்டு படித்து வரும் இளைஞர் ஒருவர், தன் நண்பர்களுடன் Pub-ல் நடனமாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதேபோல, இந்தூரில் யோகாசனம் செய்து கொண்டிருந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
மேலும், உத்தரப்பிரதேசம் மஹோபாவில் உள்ள வங்கியில் 30 வயதான வங்கியாளர் ஒருவர், பணியாற்றி கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். இப்படியாக சமீபகாலமாக மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.