நாடு முழுவதும் கடந்த 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்ட வேளையில், மறுபுறம் ஹோலி பண்டிகையும் கோலகலமாக கொண்டாடப்பட்டது. ஹோலிப் பண்டிகையின்போது, ஒருவொருக்கொருவர் வண்ணப்பொடிகளை பூசி மகிழ்வது வழக்கம். ஆனால், சில இடங்களில் இந்த ஹோலி பண்டிகையை வைத்து பெண்கள் மீது அத்துமீறும் சம்பவங்களும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
இதனை உணர்த்தும் விதமாக திருமண வரம் தேடும் இணையதளமான பாரத் மேட்ரிமோனியும், ஹோலி பண்டிகையை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, ஹோலி கொண்டாட்டத்தின் போது பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாகவும், அதனால், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி பண்டிகைகள் கொண்டாட வேண்டும் எனவும் ட்வீட் செய்திருந்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஹோலி பண்டிகையில் ஜப்பானிய இளம் பெண் அங்கிருந்த இளைஞர்களால் துன்புறுத்தலுக்கு ஆளான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானிய இளம் பெண்ணை பிடித்து அவர் மீது வண்ண பொடிகளை சிறுவர்கள் தூவுவதுடன், அந்த பெண்ணின் மீது முட்டையை உடைக்கின்றனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து அத்துமீறும் அந்த சிறுவர்களின் பிடியில் இருந்து அவர் தப்பிக்க முயல்வதும், ஆனால் தொடர்ந்து இழுத்து பிடித்த ஒரு சிறுவனை கன்னத்தில் அறைவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலானதை அடுத்து, தேசிய மகளிர் ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில், உடனடியாக டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. விரிவான விசாரணை அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வெளிநாட்டவர் யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை என்று டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.
பஹர்கஞ்ச் என்ற இடத்தில் ஜப்பானிய இளம் பெண்ணின் மீது இந்த துன்புறுத்தல் நடந்தது கண்டறியப்பட்டுள்ள நிலையில், போலீசார் வீடியோவில் உள்ள சிறுவர்கள், இளைஞர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ஜப்பானிய தூதரகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், கணவன் மனைவியாக செல்லும் தம்பதியிடம், இளைஞர்கள் சிலர் ஹோலி பண்டிகையை வைத்து அத்துமீறும் வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த வீடியோக்கள் இரண்டும் மிகவும் பழைய வீடியோக்கள் என்று சிலரும், ஜப்பானிய பெண் மீதான துன்புறுத்தல் என்று கூறப்படும் வீடியோவை அந்தப் பெண்ணே மகிழ்ச்சியாக பதிவிட்டு பின்னர் நீக்கிவிட்டதாகவும் குறிப்பிட்டு வருகின்றனர்.