இந்தியா

"பொறுமையா சாப்பிடுவோம்" இது யானையின் விருந்து !

jagadeesh

கர்நாடக மாநிலம் கபினி காடுகளில் காட்டு யானை ஒன்று ரசித்து ருசித்து மூங்கிலை சாப்பிடும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

யானைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12 ஆம் தேதி உலக யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.உலத்தில் இதுவரை 22 வகை யானை இனங்கள் அழிந்து விட்டது. ஆதிகாலத்தில் 24 வகை யானைகள் வாழ்ந்துள்ளன. ஆனால் தற்போது, உலகில் ஆப்பிரிக்க, ஆசிய வகை யானைகள் மட்டுமே உள்ளன.

ஆசிய யானைகள் சுமார் 55,000 வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு யானை கூட்டம், ஆண்டுக்கு, 350 - 500 ச.கி.மீ., வரை உணவுக்காக பயணிக்கும். இந்தியாவில் உள்ள 101 யானை வழித்தடங்கள் கட்டுமானம், விவசாய நிலங்களால் குறுகி விட்டன. யானைகளை பாதுகாக்கும் போராட்டம் ஒரு பக்கம் தொடர்ந்து நடந்துக்கொண்டேதான் இருக்கிறது.

இந்நிலையில் உலக யானைகள் தினத்தில் இன்று யானைக்கு மிகவும் பிடித்த உணவை இப்போது தெரிந்துக்கொள்ளலாம். அதில் முதலாவதாக இருப்பது மூங்கில் செடிகள். மூங்கில் மரம் போல வளர்ந்தாலும் அது புல் வகையைச் சேர்ந்தவைதான். மூங்கில்களை யானைகள் மிகவும் விரும்பி உண்ணும். அதற்கு முக்கியக் காரணம் மூங்கிலில் இருக்கும் நீர். அதுபோலவே யானைக்கும் மிகவும் பிடித்தமானது பலாப்பழங்கள். பலாப்பழத்தின் வாசனை எவ்வளவு தூரத்தில் இருந்து வந்தாலும் யானை சாப்பிட வந்துவிடும்.

உலக யானைகள் தினமான இன்று காட்டுயிர் புகைப்பட கலைஞர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கர்நாடகாவின் கபினி வனவிலங்குகள் சரணாலயத்தில் காய்ந்துப்போன மூங்கில் செடிகளுக்குள் நுழைந்த யானையொன்று, அதில் நீர் இருக்கும் தண்டுப்பகுதியை மட்டும் உடைத்து நிதானமாக ரசித்து ருசித்து சாப்பிடுவதை வீடியோவாக பதிவிட்டிருக்கிறார்.