இந்தியா

மகனை பற்றி கேட்ட நிருபரை மோசமாக திட்டிய மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா – வீடியோ

மகனை பற்றி கேட்ட நிருபரை மோசமாக திட்டிய மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா – வீடியோ

Veeramani

லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக சிறையில் உள்ள தனது மகன் ஆஷிஷ் மிஸ்ரா பற்றி கேள்வி கேட்ட நிருபரை மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தரக்குறைவாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்றது தொடர்பான குற்றச்சாட்டில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகனை அஜய் மிஸ்ரா நேற்று பார்த்துவிட்டுவந்தார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பியபோது, அவரிடம் இருந்த மைக்கை பிடுங்கிய அஜய் மிஸ்ரா அவரை தரக்குறைவாக பேசியுள்ளார். அந்த வீடியோவில்,  மைக்கை நிறுத்து, இந்தமாதிரி முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள் என்று கேள்வியெழுப்பியதுடன், செய்தியாளர்களை திருடர்கள் என்று அழைப்பதும் பதிவாகியுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மத்திய உள்துறை இணை அமைச்சராக இருக்கும் அஜய் மிஸ்ரா லக்கிம்பூர் கேரியில் ஆக்சிஜன் ஆலையை திறந்துவைத்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

அக்டோபர் 3-ஆம் தேதி லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கொல்லப்பட்டது "திட்டமிட்ட சதி" என்று சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில், கொலை செய்யும் நோக்கத்துடன் ஆஷிஷ் மிஸ்ரா ஓட்டிச் சென்ற வாகனத்தால் விவசாயிகள் நசுக்கப்பட்டதாகவும், அது அலட்சியத்தால் ஏற்பட்ட மரணம் அல்ல என்றும் கூறியுள்ளது.

மேலும், ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் பிறருக்கு எதிராக வேகமாக வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டை மாற்றிவிட்டு கொலை முயற்சி மற்றும் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டை சேர்க்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. இதன்பின்னர் மத்திய அமைச்சரவையில் இருந்து அஜய் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது.