குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர் ஜகதீப் தன்கர் சுலபமாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி 788 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனிக்கிழமை நடைபெற உள்ள தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் ஆவர். இதில், மக்களவை உறுப்பினர்கள் 543 பேர். மாநிலங்களவை உறுப்பினர் 245 பேர். வெற்றி பெற குறைந்தபட்சம் 395 ஓட்டுகள் தேவை என்கிற சூழலில், பாரதிய ஜனதா கட்சிக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள வலுவான பெரும்பான்மையால், ஜகதீப் தன்கர் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர் மர்கரெட் ஆல்வாவை தோற்கடித்து நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவராக தேர்வுபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மார்கரெட் ஆல்வாவுக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார். முன்னதாக, ஆதரவுகோரி மார்கரெட் ஆல்வா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், மார்கரெட் ஆல்வாவுக்கு சந்திரசேகரராவ் ஆதரவு அளித்துள்ளார். இவருக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளித்திருந்ததைத் தொடர்ந்து, தற்போது சந்திரசேகர ராவும் ஆதரவு அளித்துள்ளார்.