இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அரசு வேலைகள், அரசு மானியங்கள் கிடைக்காது, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கொண்ட உத்தரப் பிரதேசத்தின் சட்ட வரைவு மசோதாவுக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உலக மக்கள் தொகை நாளையொட்டி, உத்தரப் பிரதேச அரசு மக்கள்தொகை கட்டுப்பாட்டு வரைவு மசோதா ஒன்றை தாக்கல் செய்தது. அதன்படி, ``இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலைகள், அரசு மானியங்கள் கிடைக்காது, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும், அதேநேரம், 2 குழந்தைக்குள் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக 2 முறை ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்" என்பது போன்ற அம்சங்கள் இடம்பெற்றன. மேலும், உத்தரப் பிரதேச அரசின் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ள இந்த வரைவு மசோதா குறித்து பொதுமக்கள் வரும் 19ஆம் தேதிக்குள் கருத்துகளை தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த மசோதாவுக்கு மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆர்எஸ்எஸ் ஆதரவு அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் அமைப்பும் கடுமையாக எதிர்த்துள்ளது. இது தொடர்பாக மாநில சட்ட ஆணையத்திற்கு கடிதம் ஒன்றையும் அந்த அமைப்பு அனுப்பி இருக்கிறது.
அந்தக் கடிதத்தில், ``ஒரு பெண்ணுக்கு சராசரியாக இரண்டு குழந்தைகளுக்குக் குறைவாக பெற்றுக்கொள்ள சொன்ன எந்தவொரு அரசாங்கக் கொள்கையும் பல மோசமான சமூக மற்றும் பொருளாதார விளைவுகளுடன் மக்கள் தொகை சுருக்கத்திற்கு வழிவகுத்துள்ளது. இதற்கு சீனாவின் ஒரு குழந்தைக் கொள்கையே உதாரணம்.
சீனாவில் இந்தக் கொள்கை அமல்படுத்தப்பட்ட சுமார் மூன்று தசாப்தங்களுக்குள், அது முற்றிலும் திரும்பப் பெறப்பட வேண்டியிருந்தது. ஒரு குழந்தை விதிமுறை வெவ்வேறு சமூகங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வை அதிகரிக்க வழிவகுக்கும். மக்கள் தொகை குறைந்த இடங்களில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேநேரம் பிற சமூகத்தினர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலைதான் தற்போது அசாம் மற்றும் கேரளாவில் நிகழ்ந்து வருகிறது. இந்த மாநிலங்களில் இந்துக்கள் ஒட்டுமொத்த எண்ணிக்கை மாற்று வீதம் 2.1 சதவீதம் என குறைந்துவிட்டது. அதேநேரம் இஸ்லாமியர்கள் மாற்று விகிதம் அசாமில் 3.16 சதவீதமாகவும், கேரளாவில் 2.33 சதவீதமாகவும் இருக்கிறது.
இது மட்டுமில்லாமல் பொருளாதார ரீதியாகவும் இந்த ஒரு குழந்தை திட்டம் சரிப்பட்டு வராமல் போகும். ஒரு குழந்தை மட்டுமே இருக்கும் வீடுகளில் அந்தக் குழந்தை தனது உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியாமல் போகும். மேலும், வேலை பார்க்கும் வயதுள்ள பிரிவினருக்கும், அவர்களைச் சார்ந்திருக்கும் பிரிவினருக்கும் இடையிலான சமநிலையையும் இந்த மக்கள் தொகை தடுப்பு திட்டம் குலைக்கும். எனவே உத்தரப் பிரதேசம் இதுபோன்ற சூழ்நிலையில் இறங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏற்றத்தாழ்வைத் தீர்க்கும் வகையில் கொள்கையை வடிவமைக்க வேண்டும்" என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை அதில் சொல்லியுள்ளது.