வெற்றி துரைசாமி புதியதலைமுறை
இந்தியா

இயக்குநர், கல்வியாளர், புகைப்பட கலைஞர், பைக் ரைடர்! மறைந்த வெற்றி துரைசாமியின் அறியாத பக்கங்கள்!

“போக வேண்டாம் என்று சொன்னால், போகாமல் இருப்பவன், இந்த முறை, இதுவே கடைசி என்று சொல்லிவிட்டுச் சென்றான். ஆனால், இதுவே அவனது கடைசி பயணமாக இருக்கும் என்று ஒருகாலமும் நினைத்துப்பார்க்கவில்லை” - சைதை துரைசாமி

யுவபுருஷ்

யார் இந்த வெற்றிதுரைசாமி?

இயக்குநர், கல்வியாளர், புகைப்பட கலைஞர் மற்றும் பைக் ரைடர் என்று பண்முகத்திறமையோடு வலம் வந்த வெற்றி துரைசாமி, ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த செய்தி, அவருடன் பழகியவர்கள், அவரால் பயனடைந்த மாணவர்களில் தொடங்கி, பலருக்கும் பேரிடியாக அமைந்தது. இந்த நேரத்தில் இவரது மரணத்தில் விபத்தில் சிக்கியது எப்படி என்பது முதல், எப்படி மீட்கப்பட்டார் என்பது வரை முழுமையாக பார்க்கலாம்.

‘என்றாவது ஒரு நாள்’ என்ற படத்தை இயக்கியுள்ள வெற்றி துரைசாமி, அடுத்ததாக ஒரு த்ரில்லர் படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தாராம். இந்த படத்திற்கான ஷூட்டிங் லொகேஷனை பார்ப்பதற்காகவே இவர் ஹிமாச்சல பிரதேசத்திற்கு சென்றதாக தெரிகிறது. விபத்து நடந்த கடந்த 4ம் தேதி மதியம் 2.30 மணி அளவில் இமாச்சலப் பிரதேச மாநிலம் கின்னூர் மாவட்டம் கஷாங் நாலா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 5ல் இனோவா காரில் பயணம் செய்துகொண்டிருந்துள்ளார் வெற்றி துரைசாமி. அப்போது கட்டுப்பாட்டை இழந்து கார் மலையிலிருந்து கீழே புரண்டு சிந்து நதியின் துணை நதியான சட்லஜ் ஆற்றில் விழுந்து மூழ்கியுள்ளது. இதனைப் பார்த்த சுற்றுலா பயணிகள், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இந்த தகவலின் பேரில் மாவட்ட போலீசார் தீயணைப்புத் துறையுடன் இணைந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, இனோவா கார் ஆற்றினுள் மூழ்கி இருப்பது தெரியவந்தது. மேலும், ஆற்றுக்கு அருகே ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் கிடந்த ஒருவரை மீட்டதோடு, மூழ்கி இருந்த காருக்குள் சடலமாக இருந்த ஓட்டுனரை மீட்டனர்.

ஐடி கார்டுகள் சரிபார்ப்பின் போது உயிரிழந்தவர், ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் தஞ்சின் என்பதும், காயங்களுடன் மீட்கப்பட்டவர் திருப்பூரைச் சேர்ந்த கோபினாத் என்பதும் தெரியவர, மயக்க நிலை தெளிந்த கோபிநாத், தன்னுடன் வந்த வெற்றி துரைசாமி எங்கே என்று கேட்டுள்ளார். அப்போதுதான், வெற்றிதுரைசாமி அந்த காரில் பயணம் செய்தது போலீஸுக்கு தெரியவந்தது.

ஹிமாச்சலுக்கு விரைந்த சைதை துரைசாமி 

தொடர்ந்து, வெற்றி துரைசாமி விபத்தில் சிக்கிய தகவல் அவரது தந்தையும், முன்னாள் அதிமுக மேயருமான சைதை துரைசாமிக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், அன்றே ஹிமாச்சலுக்கு சென்றுள்ளார் சைதை துரைசாமி. இதுதொடர்பான செய்தி, அடுத்த நாளான 5ம் தேதி காலையில் தமிழக ஊடகங்கள் உட்பட தேசிய அளவில் வெளியானது. மறுநாள் காலை 10 மணிக்கு ஹிமாச்சலப் பிரதேச போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், ஆற்றினுள் மூழ்கி நொறுங்கிய காரை மீட்டனர். காரினுள் இருந்த வெற்றி துரைசாமி, கோபிநாத் ஆகியோரின் உடமைகள், வெற்றி துரைசாமியின் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுஅவரது தந்தை சைதை துரைசாமியிடம் ஹிமாச்சல பிரதேச போலீசார் அடையாளப்படுத்தி ஒப்படைத்தனர்.

விபத்து ஏற்பட்ட இடத்திலும், அதற்கு அருகாமையிலும் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடியும், வெற்றி துரைசாமியின் நிலவரம் தெரியாமல் இருந்தது. மேலும், நாடு முழுவதும் இந்த சம்பவம் பேசு பொருளானதால் தேசிய பேரிடர் மீட்பு பணிக்கு அழைப்பு விடப்பட்டது.

சவால்களுக்கு இடையே தேடுதல் பணி!

தொடர்ந்து, 6ம் தேதி அன்று ரப்பர் படகுகள், மோட்டார் படகுகள் மற்றும் பாறைகளை உடைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களோடு சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு பணியினர் களத்தில் குதித்தனர். அப்போது, தண்ணீரின் வெப்பநிலை மிக குறைவாக இருந்த காரணத்தினால் தண்ணீருக்குள் மூழ்கி தேட முடியாத நிலையில் அருகில் இருந்த பாறைகள், பாறை இடுக்குகள் ஆற்றங்கரை ஓரப் பகுதிகளில் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, வெற்றி துரைசாமி பற்றி தகவல் அளித்தால் ரூ. 1 கோடி அளிப்பதாக அவரது தந்தை சைதை துரைசாமி அறிவித்தார்.

குறைவான வெப்பநிலை, உறைபனி, கடுங்குளிர் என பல சவால்களான சூழல்கள் இருந்ததால் ராணுவத்திற்கும் கடற்படைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து, 7ம் தேதி ராணுவம், கடற்படை, தனியார் ஸ்கூபா நீச்சல் வீரர்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறு சிறு அணிகளாக பிரிந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பாறை இடுக்கில் மனித மூளையும், சிதறிய உடல் பாக பகுதிகள், ரத்த மாதிரிகளும் ராணுவத்தினரால் கண்டெடுக்கப்பட்டது.

மூளை பாகம் யாருடையது?

விபத்தில் இறந்த ஓட்டுநர் மற்றும் மீட்கப்பட்டவர் இருவருக்கும் தலையில் அடிபடாததால், அவர்களது மூளை பாகம் சிதற வாய்ப்பில்லை என்பதால், தேடுதல் பணி மிகத்தீவிரமானது. கிடைத்த மனித மூளை, உடல் பாகங்கள் மற்றும் ரத்த மாதிரிகள் டிஎன்ஏ ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. இதனிடைய நான்காம் தேதி மதியம் 1 மணியளவில் வெற்றி துரைசாமி அவரது நண்பர் கோபிநாத் ஆகியோர் உணவு விடுதிக்கு சென்று உணவு சாப்பிட்டுவிட்டு பின் காரில் ஏறும் சிசிடிவி காட்சி பதிவுகளை போலீசார் கைப்பற்றினர்.

தேடுதல் பணியின் அடுத்த கட்டமாக வெற்றி துரைசாமி ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்பதால், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள கர்ச்சம் அணைக்கட்டு வரை 8-ம் தேதி காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பொம்மையை ஆற்றில் விட்டு சோதனை!

ஒருவேளை அணைக்கட்டை தாண்டி ஆற்றில் வெற்றி துரைசாமி அடித்து செல்லப்பட்டிருந்தால் மூன்று தினங்களில் அவர் பக்ராநங்கல் அணைக்கட்டை அடைந்திருக்க வேண்டும் என்பதால் அங்கு இரண்டு குழுக்கள் அனுப்பப்பட்டு தேடுதல் பணி நடந்தது. அடுத்த நாளான 9ம் தேதியும் வெற்றி துரைசாமியின் நிலவரம் தெரியவரவில்லை.

இதையடுத்து, 10ம் தேதியன்று, வெற்றி துரைசாமியை போலவே ஒரு பொம்மையை தயார் செய்து அதை ஆற்றில் தூக்கி போட்டு, விபத்து நடந்த நேரத்தில் வெற்றி துரைசாமி எந்த வழியாக அடித்து செல்லப்பட்டு இருப்பார்? பாறை இடுக்குகளில் சிக்க வாய்ப்பு உள்ளதா? என்பதை அறிய டெமோ செய்து தேடுதல் பணி நடைபெற்றது. இதற்கிடையே, கிடைக்கப்பெற்ற மனித மூளை பாகம் உள்ளிட்ட உடல் பாகங்களின் டிஎன்ஏ ஆய்வறிக்கை கிடைத்ததால், சைதை துரைசாமி குடும்பத்தாருக்கும் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எங்கு கிடைத்தது உடல்?

ஒருபக்கம் டி.என்.ஏ டெஸ்ட், மறுபக்கம் தேடுதல் பணி என்று இருப்பக்கமும் பணிகள் நடந்து வந்த நிலையில், வெற்றி துரைசாமியின் உடல் நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. ஒன்பது நாட்களாக வெற்றியை தீவிரமாக தேடி வந்த நிலையில், விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு பிறகு சட்லஜ் நதியில் பொவாரி என்ற இடத்திற்கு அருகே நீருக்குள் பாறைக்கு அடியில் இருந்து ஸ்கூபா டைவிங் வீரர்கள் வெற்றியின் உடலை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட வெற்றியின் உடல் அருகிலுள்ள சிம்லா அரசு மருத்துவமனையில் வைத்து பிரேத பரிசோதனை மற்றும் எம்பார்மிங் செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து, அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் அஜித் உட்பட பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதி மரியாதை செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

மீட்புக்குழு சொல்வது என்ன?

வெற்றியின் உடலை மீட்டது எப்படி என்பது குறித்து பேசிய மீட்பு குழுவினர், ”35 - 40 அடி ஆழம் வரை ஆற்றில் தண்ணீருக்கு அடியில் தேடுதல் பணி நடைபெற்றது. 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிறகுதான் அவரது உடல் கிடைத்தது” என்று தெரிவித்துள்ளனர். முதற்கட்ட தகவலில் காரை ஓட்டிச்சென்ற ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால்தான், விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

செய்தியாளர் - அன்பரசன்

எழுத்து - யுவபுருஷ்