இந்தியா

காங்கிரஸில் இன்று இணைந்தார் சத்ருகன் சின்கா

காங்கிரஸில் இன்று இணைந்தார் சத்ருகன் சின்கா

webteam

முன்னாள் மத்திய அமைச்சரும் பீகார் மாநில எம்.பி.யுமான சத்ருகன் சின்கா, காங்கிரஸ் கட்சியில் இன்று முறைப்படி இணைந்தார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் பீகார் மாநிலம், பாட்னா தொகுதி பா.ஜ. எம்.பி.யான சத்ருகன் சின்கா, பிரதமர் மோடியையும், கட்சி தலைமையையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இதையடுத்து அவரை கழற்றிவிட்ட பாஜக, அவரது பாட்னா தொகுதியில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை வேட்பாளராக அறிவித்தது. இதையடுத்து சின்கா காங்கிரஸ் கட்சியில் இணைவார் எனக் கூறப்பட்டது. 

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை அவர் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “ராகுலுடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது. உற்சாகம் அளிக்கும் வகையில் அவர் பேசினார். இன்று அவர் நாட்டின் மிகவும் பிரபலமான தலைவராக இருக்கிறார். நானும் நேரு - காந்தி குடும்பத்தின் ஆதரவாளர்தான்’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் முறைப்படி, இன்று இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், ரந்தீப் சுர்ஜ்வாலா ஆகியோர் முன்னிலையில் அவர் சேர்ந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பீகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சக்தி சிங்கை, பாஜகவின் முது கெலும்பாக இருக்கிறார் என்று தவறுதலாகச் சொன்னார். அருகில் இருந்தவர்கள் சுட்டிக்காட்டிய பின், தவறு நடப்பது சகஜம்தான் என்று சொல்லி திருத்திக் கொண் டார்.