இந்தியா

“10% இட ஒதுக்கீடு மிகவும் ஆபத்தானது” - அரவிந்த் கெஜ்ரிவால்

webteam

பொருளாதார ரீதியாக நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது மிகவும் ஆபத்தானது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 10 சதவிகித மசோதாவுக்கு எதிராகா மக்களவையில் நேற்று அதிமுக எம்.பி தம்பிதுரை கடுமையாக பேசினார். பிரதமர் மோடி உறுதியளித்தபடி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களே இருக்க மாட்டார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை அவர் கூறியிருந்தார். 4 மணி நேர விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேறியது. 

தற்போதைய நிலையில் பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்கள் அரசு வேலைவாய்ப்புகளை பெறுவதிலும் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதிலும் பின் தங்கியிருப்பதாக மசோதா‌வில் கூறப்பட்டுள்ளது. எனவே, இத்தரப்பினரின் முன்னேற்றத்திற்கு உதவுவதற்காக சட்டப்பிரிவு 15-ல் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற திருத்தங்களை மேற்கொள்வதற்கான அனுமதி அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ளதாகவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக நலிவுற்றோருக்கான சிறப்பு வசதி என்பது சிறுபான்மையினர் க‌ல்வி நிறுவனங்கள் தவிர ஏனைய அனைத்து கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைக்கும் பொருந்தும் எனத் தெரி‌விக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதுள்ள இடஒதுக்கீடு வரம்புக்குள் அல்லாமல் கூடுதலாக 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் மசோதாவில் தெளிவுபட தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையில் திமுகவும், அதிமுகவும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, அதிமுக எம்.பிக்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், பொருளாதார ரீதியாக நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது மிகவும் ஆபத்தானது என டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “ பொருளாதார ரீதியாக நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது மிகவும் ஆபத்தானது. இந்த மசோதாவால் ஏழைகளுக்கு எந்தப் பயனும் இல்லை. மாறாக சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான சதித்திட்டம்” எனத் தெரிவித்துள்ளார்.