இந்தியா

குரங்கணி தீ விபத்தால் மிகுந்த மனவேதனை அடைந்தேன் - வெங்கையா நாயுடு

குரங்கணி தீ விபத்தால் மிகுந்த மனவேதனை அடைந்தேன் - வெங்கையா நாயுடு

rajakannan

குரங்கணி தீ விபத்து சம்பவத்திற்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் திருப்பூர் மற்றும் சென்னையை சேர்ந்த இரண்டு குழுவினர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். 39 பேர் கொண்ட குழுவில் 3 பேர் நீங்கலாக 36 வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்றம் சென்ற 30-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். காட்டுத் தீ விபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், குரங்கணி தீ விபத்து சம்பவத்திற்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். ‘குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று அவர் கூறியுள்ளார். 

இதனிடையே, குரங்கணி தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற முதலமைச்சர் பழனிசாமி தேனி, மதுரைக்கு செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தேனியில் உள்ளனர்.  

மீட்பு பணிகள் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “நள்ளிரவு 3 மணிக்கு குரங்கணிக்கு சென்ற கமாண்டோக்கள் காயமடைந்தோருக்கு உதவினர். ஏஎல்எச் என்ற நவீன ஹெலிகாப்டரை வரவழைத்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. விமானப்படையை சேர்ந்த 4 ஹெலிகாப்டர்களில், ஒன்று உடல்களை மேலே தூக்கவும், 2 உடல்களை கீழே கொண்டுவரவும், மற்றொன்று தீயணைப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறது” என்றார்.