இந்தியா

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: இந்திய வாகனங்களின் விற்பனை பாதிப்பு..!

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: இந்திய வாகனங்களின் விற்பனை பாதிப்பு..!

webteam

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, இந்திய வாகனங்களின் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

சீனாவின் வுகான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. சுகாதாரத்துறையை மட்டுமன்றி, தொழில் துறையிலும் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பொருளாதார மந்தநிலை, பிஎஸ்-4 ரகத்தில் இருந்து பிஎஸ்-6 ரகங்களுக்கு மாறுவதற்கான அறிவிப்பு உள்ளிட்ட காரணங்களால் வாகன விற்பனை ஓராண்டு காலமாக குறைந்து வந்துள்ள நிலையில், கொரோனா தாக்குதலும் இத்துறைக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் உள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள், உதிரி பாகங்களுக்காக பெரும்பாலும் சீனாவையே நம்பியுள்ளன. சீனாவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், உதிரிபாகங்கள் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாருதி, டாடா, மகேந்திரா அண்ட் மகேந்திரா, எம்.ஜி.மோட்டார் ஆகிய நிறுவனங்களின் பிப்ரவரி மாத உள்நாட்டு விற்பனை கடுமையாக சரிவடைந்துள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், டாடா நிறுவனத்தின் விற்பனை 34 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 57 ஆயிரத்து 221 வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 38 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

இதேபோல மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை 42 விழுக்காடு சரிவடைந்து, 30 ஆயிரத்து 637 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. கடந்த பிப்ரவரியில் மகேந்திரா நிறுவனம் 52 ஆயிரத்து 915 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. உள்நாட்டு விற்பனை மட்டுமல்லால், ஏற்றுமதியும் 40 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக மகேந்திரா நிறுவனம் கூறியுள்ளது. ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் 46 சதவிகிதமும், ஹூண்டாய் நிறுவனம் 10 சதவிகிதமும் இழப்பை சந்தித்துள்ளன.

அதேநேரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி ஒரு சதவிகிதமே வாகன விற்பனை சரிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு லட்சத்து 39 ஆயிரம் வாகனங்களை விற்பனை செய்திருந்த மாருதி நிறுவனம் கடந்த மாதம் ஒரு லட்சத்து 36 ஆயிரம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

எம்.ஜி.மோட்டார் நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் ஆயிரத்து 376 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஜனவரியில் மூவாயிரத்து 130 வாகனங்களை விற்பனை செய்திருந்தது எம்.ஜி. நிறுவனம். அதேநேரத்தில் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள எலக்ட்ரிக் காருக்காக மூவாயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளது.