இந்தியா

வாகன தணிக்கை: மாஸ்க் அணியாத எஸ்.ஐ. - மாஸ்க் அணிய வைத்த வாகன ஓட்டி

வாகன தணிக்கை: மாஸ்க் அணியாத எஸ்.ஐ. - மாஸ்க் அணிய வைத்த வாகன ஓட்டி

kaleelrahman

சத்தியமங்கலம் அருகே உள்ள தமிழக கர்நாடக எல்லையில் மாஸ்க் அணியாமல் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் மாஸ்க் அணியும்படி வாக்குவாதம் செய்து மாஸ்க் அணிய வைத்துள்ளார் வாகன ஓட்டி ஒருவர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ராமாபுரம் பகுதியில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மாஸ்க் அணியாமல் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி ஆவணங்களைக் கேட்டு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது தாளவாடியில் இருந்து சாம்ராஜ்நகர் நோக்கி சென்ற வாகன ஓட்டி ஒருவரை சப்-இன்ஸ்பெக்டர் தடுத்து நிறுத்தியபோது வாகனத்தில் சென்ற நபர் சப்-இன்ஸ்பெக்டரிடம், கன்னட மொழியில் நீங்கள் ஏன் மாஸ்க் அணியவில்லை? எனக் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் மாஸ்க் அணிய வேண்டியதில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பியதோடு, மற்ற வாகன ஓட்டிகளிடம் நீங்கள் மாஸ்க் அணியாமல் உள்ள போலீசாரிடம் ஆவணங்களை காட்ட வேண்டாம் எனக் கூறினார்.

இதையடுத்து உஷாரான சப்-இன்ஸ்பெக்டர் தன்னிடமிருந்த மாஸ்க்கை எடுத்து அணிந்துகொண்டார். இதை வீடியோ எடுத்த அந்த நபர் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளதால் தற்போது இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.