இந்தியா

கேரள அமைச்சரவையில் மீண்டும் ஒரு டீச்சர்... யார் இந்த வீணா ஜார்ஜ்?

கேரள அமைச்சரவையில் மீண்டும் ஒரு டீச்சர்... யார் இந்த வீணா ஜார்ஜ்?

நிவேதா ஜெகராஜா

நாளை மறுநாள் கேரளாவில் முதல்வராக பதவியேற்கவுள்ள பினராயி விஜயனின் புதிய அமைச்சரவையில் ஷைலஜா டீச்சர் இடம்பெறாத நிலையில், மற்றொரு டீச்சர் வீணா ஜார்ஜ் இடம்பெற்றுள்ளார். அவர் குறித்து விரிவாக பார்ப்போம்!

கொரோனா வைரஸ் பிறப்பிடமான சீனாவின் வூஹானிலிருந்து இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி வந்திறங்கிய இடம் கேரள தேசம் தான். முதலில் ஒரு நோயாளி என்று ஆரம்பித்து பிறகு, கொரோனா தொற்று அதிகரித்து அதிக கொரோனா நோயாளிகளைக்கொண்ட மாநிலங்களில் ஒன்றாக கொரோனா முதல் அலையின்போது கேரளா மாறியது. ஆனால், மிக குறுகிய காலத்தில் முதல் அலையை கட்டுப்படுத்தியது கேரளா. இப்படி வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதில் முதல்வர் பினராயி விஜயனின் போர்ப்படை தளபதிகளில் ஒருவராக இருந்தவர் கேரளா சுகாதாரத்துறை அமைச்சரான கே.கே.ஷைலஜா டீச்சர். இதன்காரணமாக சிறந்த 50 பெண்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

அப்படிப்பட்ட ஷைலஜா டீச்சர் புதிய கேரள அமைச்சரவையில் பங்கேற்க மாட்டார் என்று எல்.டி.எஃப் கூட்டணி அறிவித்துள்ளது. எல்.டி.எஃப் கூட்டணியின் முன்னணி கூட்டாளியான சி.பி.எம், பினராயி விஜயனைத் தவிர முந்தைய அரசாங்கத்திலிருந்த அனைத்து அமைச்சர்களையும் விலக்கி புதிய முகங்களைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதனால் கட்சி கொறடாவாக ஷைலாஜா டீச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஷைலஜா டீச்சர் அமைச்சரவையில் இடம்பெறாதது ஆளும் சிபிஎம் அரசுக்கு எதிராக சர்ச்சைகளை ஏற்படுத்திவரும் நிலையில் இதே அமைச்சரவையில் மற்றொரு டீச்சர் இடம்பெற்றுள்ளார். அவர் பெயர் வீணா ஜார்ஜ். இவர் ஆரண்முலா தொகுதியில் இருந்து இரண்டாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

யார் இந்த வீணா ஜார்ஜ்?

வீணா ஜார்ஜ் தனது அரசியல் வாழ்க்கையை சிபிஎம்மின் மாணவர் பிரிவான எஸ்.எஃப்.ஐ மூலம் தொடங்கியவர். கல்லூரி வாழ்க்கைக்கு பின் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்து பணியாற்றி வந்தார் வீணா. 2012 ல் நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை கவர் செய்ய தேர்ந்தெடுக்க ஐந்து இந்திய பத்திரிகையாளர்களில் வீணாவும் ஒருவர். பத்திரிகையாளராக, செய்தி வாசிப்பாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக திறம்பட பணியாற்றி இருக்கிறார். இதற்காக சிறந்த செய்தி வழங்குநருக்கான கேரள தொலைக்காட்சி விருதை வென்றுள்ளார். மேலும் வட அமெரிக்க பிரஸ் கிளப் மற்றும் யுஏஇ கிரீன் சாய்ஸ் விருதுகளையும் பெற்றுள்ளார்.

வீணா இயற்பியல் மற்றும் பி.எட் ஆகியவற்றில் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். பத்தினம்திட்டாவில் உள்ள கத்தோலிக்க கல்லூரியில் ஆசிரியராக ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உண்டு. வீணா முதல்தலைமுறை அரசியல்வாதி கிடையாது. இவரின் தாய் ரோசம்மா குரியகோஸ் முன்னாள் நகராட்சி கவுன்சிலராக இருந்துள்ளார். இதனடிப்படையில் அரசியலில் காலூன்றி இருக்கிறார். செய்தி சேனல்களில் தீவிரமாக பணியாற்றி வந்தாலும் மறுபுறம் அரசியலில் ஈடுபட்டு வர, அவருக்கு 2016ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எல்.டி.எஃப் வேட்பாளராக ஆனார்.

இவர் போட்டியிட்ட ஆரண்முலா தொகுதி யுடிஎஃப் கோட்டையாக அறியப்படும் நிலையில் அங்கு சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த வழக்கறிஞர் சிவதாசன் நாயரை தனது முதல் தேர்தலிலேயே 7000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதேபோல் கடந்த இரண்டு தேர்தல்களாக யுடிஎஃப் கோட்டையை உடைத்து சிபிஎம் வசம் வெற்றியை ஈர்த்திருக்கிறார். அதற்காகவே இந்த முறை அமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நாளை மறுநாள் பதவியேற்க இருக்கும் பினராயி விஜயன் அரசில் மொத்தம் இரண்டு பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் ஒருவராக வீணா ஜார்ஜ் இடம்பெற்றுள்ளார். அவருக்கான இலாக்கா ஒதுக்கீடு இன்னும் சொல்லப்படவில்லை. ஆனால் வீணா பொறுப்பேற்ற பிறகு சிறந்த அமைச்சர்களில் ஒருவராக மாற முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள். அதற்கேற்ப அவரின் முந்தைய கால செயல்பாடுகள் அமைந்துள்ளது. எம்எல்ஏவாக இருக்கும்போதே மக்கள் பணிகளில் அவர் செலுத்திய கவனம் இந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.