இந்தியா

பிரம்மாண்டமாக நடைபெற்ற விசிக விருது விழா.. மேடையில் பாஜக அரசை வெளுத்து வாங்கிய சித்தராமையா

பிரம்மாண்டமாக நடைபெற்ற விசிக விருது விழா.. மேடையில் பாஜக அரசை வெளுத்து வாங்கிய சித்தராமையா

சங்கீதா

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக 2022-ம் ஆண்டுக்கான பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கர்நாடகா முன்னாள் அமைச்சர் சித்தராமையாவுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 2022-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அக்கட்சியைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். 

விழாவில், அம்பேத்கர் சுடர் விருது கர்நாடக முன்னாள் முதல்வர், எதிர்கட்சித் தலைவர் சித்தராமையாவுக்கும், பெரியார் ஒளி விருது எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரைக்கும், மார்க்ஸ் மாமணி விருது மறைந்த எழுத்தாளர் ஜவஹருக்கும், காமராசர் கதிர் விருது வி.ஜி.சந்தோசத்திற்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி செல்லப்பனுக்கும், காயிதேமில்லத் பிறை விருது எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் துணை தலைவர் தெஹ்லான் பாகவிக்கும், செம்மொழி ஞாயிறு விருது தொல்லியல் அறிஞர் கா.இராசனுக்கும் வழங்கப்பட்டது.

சித்தராமையா பேசுகையில், “இன்றைக்கு இந்த நாட்டின் துர் சாபக்கேடு என்னவென்றால் இந்நாட்டை ஆள்வோரே இந்நாட்டை பிளவுபடுத்தக் காரணமாகி வருகின்றனர். இப்போது அதிகாரத்தில் உள்ள மத்திய அரசு நாங்களும் சமூகநீதிக்காகத் தான் போராடுகிறோம் என்கிறார்கள். நாங்கள் ஒரு ஆதிவாசி பெண்மணியை ஜனாதிபதி ஆக்கியுள்ளோம் என்கிறார்கள். ஆனால் அனந்தகுமார் ஹெக்டே " இந்த நாட்டின் அரசியல் சட்டத்தை மாற்றுவதற்காகத் தான் ஆட்சிக்கு வந்தோம்" என்கிறார். இது பிரதமருக்கோ, உள்துறை அமைச்சருக்கோ தெரியாதா? நரேந்திர மோடியின் அனுமதியோடு தான் இந்த வார்த்தைகளை ஹெக்டே சொல்லியிருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இல்லையெனில் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா?.

பாஜக எப்போதும் சமூகநீதிக்கு எதிரான கட்சி. பாஜக எப்போதும் இந்த நாட்டின் அரசியல் சட்டத்தை மதித்ததே இல்லை. 1925 ல் ஆர்எஸ்எஸ் துவங்கியதில் இருந்து இதுவரை யாராவது ஒரு விளம்புநிலை சமூகத்தை சேர்ந்தவரை ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவராக உருவாக்கி இருக்கிறீர்களா?.

ஹிட்லர் தன் ஆட்சியில் பொய் சொல்வதற்காகவே அமைச்சர்களை உருவாக்கியிருந்தார். அதே போல் தான் ஆர்எஸ்எஸ் பொய் சொல்வதற்காகவே பிரதமரையும் அமைச்சர்களையும் உருவாக்கியுள்ளது. இடஒதுக்கீடு ஒன்றும் பிச்சை கிடையாது. இது நம் அடிப்படை உரிமை. எவ்வளவு காலம் இந்த நாட்டில் சாதிய வேறுபாடுகள் இருக்கிறதோ அதுவரை இடஒதுக்கீடு வேண்டும் என்றார் அம்பேத்கர். இடஒதுக்கீட்டை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு மோடி ஆட்சியில் கிடைத்துவிட்டது. அவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களா?

அரசின் சொத்துக்களை பாஜக தொடர்ந்து தனியார்மயமாக்கி வருகிறது. இதற்கு காரணம் தனியார் மயமாக்கிவிட்டால் இடஒதுக்கீடு வழங்காமல் இருந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். நாம் தனியார் வேலையிலும் இடஒதுக்கீடு கேட்க வேண்டும். அப்படி கேட்பது ஒன்றும் அரசியல் சட்டத்திற்கு எதிரானது அல்ல.” என்று கூறியுள்ளார்.

விசிக விருது விழாவில் டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் மட்டும் நாம் ஏன் இன்னும் சாதியக் கட்டமைப்பை விட்டு வெளியேறாமல் இருக்கிறோம்? உயர்வு தாழ்வை கற்பிக்கும் சாதியை தூக்கி எறியாமல் நாம் இருப்பது ஏன்? .

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத சாதி பாகுபாடு இந்தியாவில் மட்டும் ஏன் இருக்கிறது?. இன்று நம் சமூகம் பெற்றிருக்கும் கல்வியும் வேலைவாய்ப்பும் புரட்சியாளர் அம்பேத்கரின் தியாகத்தால் கிடைத்தது. ஆனால் இப்போது கல்விக்காகவும் வேலைவாய்ப்பிற்காகவும் மீண்டும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு குழந்தையை பள்ளிக்கு அனுப்ப ஒரு லட்சத்திற்கும் அதிகமாக செலவாகிறது. 98% தலித் மக்கள் இன்றும் இவ்வளவு செலவு செய்து பிள்ளைகளை படிக்க வைக்கும் நிலையில் இல்லை என்பது தான் உண்மை. தன்னை எதிர்த்துப் பேசுவோரை பாஜக அரசு கைது செய்கிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து கல்வி, தொழிற்சாலைகள் அனைத்தையும் தனியார்மயமாக்கிக் கொண்டிருக்கின்றன.

அம்பேத்கரின் பிள்ளைகள் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். எதையும் செய்யாமல் அம்பேத்கருக்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறோம். சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நிலைநிறுத்த அம்பேத்கர் வழியில் போராடுவோம்” இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக விழாவில் கலந்துகொள்ள வந்த விருந்தினர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் கர்நாடகா முன்னாள் அமைச்சர் சித்தராமையா, விசிக தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அறிவாலயத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.