இந்தியா

திசைமாறியது வாயு புயல் ! குஜராத் மாநிலத்தை தாக்க வாய்ப்பில்லை

திசைமாறியது வாயு புயல் ! குஜராத் மாநிலத்தை தாக்க வாய்ப்பில்லை

Rasus

அரபிக் கடலில் தீவிரமடைந்துள்ள வாயு புயல் குஜராத் மாநிலத்தை தாக்க வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது. வாயு புயலானது இன்று பிற்பகல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், புயல் குஜராத் மாநிலத்தை தாக்க வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது கணித்துள்ளது. குஜராத்தின் கடற்கரை பகுதிகளான வேராவல்,‌ போர்பந்தர் மற்றும் துவாரகாவை ஒட்டியே புயல் கடந்து செல்லக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேநேரம், புயல் கரையை நெருங்கும்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே புயல் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கையாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புயலால் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளிலிருந்து 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்திய கடலோர காவல்படை, கடற்படை மற்றும் விமானப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புயல் பாதிப்புகளை தவிர்க்க பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களும் திரும்ப வரவழைக்கப்பட்டு விட்டனர்.