கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. அம்மாநில முதல்வராக, முதல்முறையாக எம்எல்ஏ ஆன பஜன்லால் ஷர்மா பதவியேற்றுக் கொண்டார். கடந்த 20 ஆண்டுகளாக ராஜஸ்தான் பாஜகவின் முகமாக இருந்துவரும் வசுந்தரா ராஜேவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக வசுந்தராவை முன்னிலைப்படுத்துவதை பாஜக தலைமை தவிர்த்து வந்ததுடன், அவரை முதலமைச்சராகவும் அறிவிக்கவில்லை. இது ராஜஸ்தான் அரசியலிலும் பாஜகவிலும் நீறுபூத்த நெருப்பாக கனன்று வருகிறது.
இந்தச் சூழலில்தான், தம்மை முதல்வராக்காத விஷயத்தில் வசுந்தரா ராஜே கடும் அதிருப்தியடைந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, அவர் ராஜஸ்தான் மாநில மக்களவைத் தேர்தலின்போது பிரசாரத்தில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. இதையடுத்து, அதன் கோபத்தைத் தற்போது மறைமுகமாக வெளிப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர், ”கடந்த காலங்களில், விசுவாசம் மற்றும் மரியாதையின் அடிப்படையில் அரசியல் உறவுகள் கட்டமைக்கப்பட்ட நிலையில், இன்று நடக்கக் கற்றுக் கொடுத்தவரின் விரலையே வெட்ட முயற்சி செய்யப்படுகிறது” என்ற கருத்துதான் அம்மாநில அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. வசுந்தராவின் இந்தக் கருத்து பாஜக மேலிடத்தையும் மாநிலத் தலைவர்களையும் கடுமையான விமர்சிப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜெய்ப்பூரின் முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்த தியா குமாரி, ஒருகாலத்தில் வசுந்தராவுக்கு மிக நெருக்கமானவராக இருந்தார். ஆனால், வசுந்தரா ஆட்சியின்போது தியா குமாரி வீட்டுச் சொத்துகள் அகற்றப்பட்டதில் இருவருக்குமிடையே பிளவு ஏற்பட்டது. இதையறிந்தே தியா குமாரியை பாஜக மேலிடம் வளர்த்து வருவதாகவும், அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே வசுந்தரா ராஜே மேலும் அதிருப்தியில் இருப்பதாலும், அதன் காரணமாகவே தற்போது மறைமுகமாகச் சாடியுள்ளார் எனவும் அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு வசுந்தராவை, பாஜக ஓரங்கட்டி வருவதால், அவர் தரப்பு தனது கோஷ்டியை வலுப்படுத்தத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.