இந்தியா

ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு

ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு

ஜா. ஜாக்சன் சிங்

ஞானவாபி மசூதிக்குள் சிவலிங்கம் இருந்ததாக கூறப்படும் வழக்கில் வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கவுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த மசூதிக்கு உள்ளே இந்து கடவுள்களின் சிலைகள் இருப்பதாகவும், எனவே அங்கு வழிபட தங்களை அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் 5 இந்து பெண்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், அந்த மசூதிக்குள் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதன்பேரில் நடைபெற்ற ஆய்வில், ஞானவாபி மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக மனுதாரர்களின் வழக்கறிஞர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதன் ஆய்வு முடிவுகளும் சீலிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அந்த மசூதியில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவுக்கு தடை விதித்தது.

இதனிடையே, ஞானவாபி மசூதியில் ஆய்வுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க உத்தரவிடக் கோரி மசூதி நிர்வாகத்தினர் சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஞானவாபி மசூதியை சுற்றி நடைபெறும் இந்த தொடர் நிகழ்வுகளால் வாரணாசியில் ஒருவித பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, பாபர் மசூதி பிரச்னை போல இந்த விவகாரமும் செல்லக்கூடும் என்ற அச்சம் ஒருதரப்பு மக்கள் மத்தியில் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முக்கிய உத்தரவு

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இருதரப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் 3 மனுக்களை வாரணாசி நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது. இந்த விசாரணையின் போது நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுதான், இவ்வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வுகளை தீர்மானிக்கும் எனத் தெரிகிறது. எனவே இன்றைய வழக்கின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.