ஞானவாபி மசூதி ட்விட்டர்
இந்தியா

ஞானவாபி மசூதியின் தெற்குப் பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதி.. வாரணாசி நீதிமன்றம் உத்தரவு!

ஞானவாபி மசூதியின் தெற்குப் பகுதியில் உள்ள இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Prakash J

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அந்த மசூதி, கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வாராணசி நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதை எதிர்த்து இஸ்லாமியர்கள் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த மசூதிக்குள் உள்ள கோயிலின் அர்ச்சகருடைய வாரிசுதாரர் சைலேந்திர குமார் பதக் என்பவர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர், ‘ஞானவாபி மசூதியில் கீழ்தளத்தில் உள்ள 7 அறைகளில் ஓர் அறையில் உள்ள தெய்வங்களுக்கு தனது தாத்தா சோம்நாத் வியாஸ் பூஜை செய்து வந்தார். 1993ஆம் ஆண்டு முதல் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, அங்கு மீண்டும் பூஜைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட வேண்டும்’ என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஞானவாபி மசூதியின் தெற்குப் பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வழிபாடு நடத்துவதற்கான அர்ச்சகரை நியமிக்கவும், காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அடுத்த 7 நாள்களுக்குள் வழிபாடு நடத்தப்படும் என நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். வாராணசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஞானவாபி மசூதி நிர்வாகம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: paytm-ன் ‘இந்த’ சேவைகள் இனியில்லை.. தடை விதித்த ரிசர்வ் வங்கி.. பிப்ரவரி 29 முதல் தடை அமல்!