இந்தியா

“பிரதமரை சந்திக்க முடியாததால் ஆவேசம்” - பேருந்துக்கு தீ வைத்த வாரணாசி பெண்

“பிரதமரை சந்திக்க முடியாததால் ஆவேசம்” - பேருந்துக்கு தீ வைத்த வாரணாசி பெண்

rajakannan

பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளை சொந்தத் தொகுதியான வாரணாசியில் கடந்த செப்டம்பர் 17ம் தேதி கொண்டாடினார். பின்னர், செப்டம்பர் 18ம் தேதி வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார். இந்தப் பயணத்தின் போது, வாரணாசி தொகுதியைச் சேர்ந்த வந்தனா ரகுவன்ஷி என்ற பெண் பிரதமர் மோடியை சந்திக்க முயன்றுள்ளார். ஆனால், பிரதமரை சந்திக்க விடாமல் அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடியை சந்திக்க முடியாததால் ஆவேசமடைந்த வந்தனா, இன்று உத்திரப் பிரதேச அரசுப் பேருந்து ஒன்றிற்கு தீ வைத்துள்ளார். வந்தானா தான் கொண்டு வந்த பெட்ரோலை பேருந்து மீது ஊற்றி தீ வைத்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். முதலில் பேருந்துக்குள் இருந்த ஒரு சிலரை வெளியே வருமாறு வந்தனா கூறியுள்ளார். பின்னர், பேருந்துக்கு தீ வைத்துள்ளார். தீ உடனடியாக பேருந்து முழுவதும் பரவியது. சொகுசு பேருந்துக்கு அவர் வைத்த தீயினால் பதட்டம் ஏற்பட்டது. 

இதனையடுத்து, தீயணைப்பு வாகனம் அந்த இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்தது. சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்குப் பின்னர் பேருந்தில் பரவி இருந்த தீ அணைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இன்று காலை 11 மணிக்கு கண்டோன்மண்ட் பேருந்து நிலையத்தில் நடந்தது. பின்னர், வந்தனாவை போலீசார் கைது செய்தனர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வந்தனா பிரதமரையும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தையும் சந்திக்க பல முறை முயன்றதாகவும், ஆனால் முயற்சி எல்லாம் வீண் ஆனது என்று கூறினார். அதேபோல், தான் அமைதியான வழியில் போராட்டங்களை நடத்தி வந்த போது ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

பேருந்துக்கு தீ வைத்த வந்தனா, உத்திரபிரதேசத்தில் இருந்து பூர்வாஞ்சல் பகுதியை தனி மாநிலமாக பிரிக்க கோரி நீண்ட காலமாக போராடி வருகிறார்.  

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வந்தனா காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். அவரது உடல்நிலை மோசமாகவே ஆகஸ்ட் 29ம் தேதி மற்றவர்களின் வற்புறுத்தலின் பேரில் உண்ணாவிரதத்தை கைவிட்டார். வந்தனா பூர்வன்சால் ஜன் அந்தோலன் சமித் அமைப்பின் செயலாளராக உள்ளார்.